பக்கம் எண் : 491
  

நன்னூல் விருத்தியுரை
 

     இயல்பாகிய யாற்றுநீர்ப் பொருள்கோளிற் பிறழ்ந்து வருவனவற்றை மொழிமாற்று
முதலியவாகப் பகுத்தமையின் அப்பொருளுக்கு ஏற்ற இடத்து என்றாம்.

வ-று:
 
  “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்” (யா. வி. 95),
 
என வரும். இதனுள் வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தலை
உடையாள் மாமேனிமேல் தெங்கங்காய்போலத் திரண்டு உருண்ட கோழி வெண்முட்டை
உடைத்தன்ன பசலை தணிவாம் எனக் கொண்டுகூட்டுக.

     “உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள்” (நன். 410) என்பதனை முதல்சினை
என முறைநிறீஇப் பொருள் கொள்வதும் அது. (67)
 

அடிமறிமாற்றுப் பொருள்கோள்
 

{419}

ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
யாப்பீ றிடைமுதல லாக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா வடியவு மடிமறி.
 
     எ-னின், அடிமறிமாற்றுப் பொருள்கோள்415 ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்து நீங்காது கூட்டும் அடியினை
உடையவும் யாதானும் ஓர் அடியை எடுத்து, அச்செய்யுட்கண் முதல் இடை ஈறுகளின்
யாதானும் ஓர் இடத்துக் கூட்டினும் பொருளோடு ஓசைமாட்சியும் ஓசை ஒழியப்
பொருள்மாட்சியும் வேறுபடாத அடியினை உடையவும் ஆகிய பொருள்கோள்
அடிமறிமாற்றுப் பொருள்கோளாம் எ-று.

     மாட்சி- நெறிப்பட்டு ஒழுகுதல்.

     ஏற்புழி எடுத்துக் கூட்டுதல் இருவகை அடிமறிமாற்றிற்கும் பொருந்தும் ஆயினும்
அவ்வடிகள் மாற்றுதற்கு அமைந்து நீங்கும்; இவ்வடிகள் நீங்கா என்பார், ‘உடன்’
என்றும் ஓசை ஒழியப் பொருள்மாட்சி மாத்திரையும் மாறா அடியவும் என்பார்.
 
----------------------------------
     415நாலடிச் செய்யுட்கண் அன்றி இப்பொருள்கோள் பெரும்பாலும் வராது
என்பது சேனாவரையர் (தொல். எச்ச. 11) கருத்து.