பக்கம் எண் : 492
  

நன்னூல் விருத்தியுரை
 

‘பொருளிசை மாட்சியும்’ என உம்மை தந்தும் கூறினார்.

வ-று:
 
  “நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டும்
மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால் (நாலடி. 93)
 
என்பதனுள்,

     கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டும்
     விடுக்கும் வினையுலந்தக் கால்
     மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம்

இஃது அறியார்,

     நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்

என அடிகளை ஏற்புழி எடுத்துக் கூட்டுக.
 
  “மாறாக் காதலர் மலைமறந் தனரே
ஆறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே” (யா. வி. 73)
 
என்பதனுள் யாதானும் ஓர் அடியை எடுத்து, யாதானும் ஓர் இடத்துக் கூட்டி உச்சரித்துப், பொருளும் ஓசையும் வேறுபடாமை காண்க.
 
  “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்
சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங்
கொலைப்பாலுங் குற்றமே யாம்” (நான்மணி. 100)
 
என்பதனுள் ஈற்றடி ஒழிந்த மூன்று அடியுள் யாதானும் ஒன்றை எடுத்து, யாதானும் ஓர் இடத்துக் கூட்டி உச்சரித்துப், பொருளும் ஓசையும் வேறுபடாமையும் ஈற்றடியை எடுத்து, யாதானும் ஓர் இடத்துக் கூட்டி உச்சரித்து, ஓசை வேறுபட்டுப் பொருள் வேறுபடாமையும் காண்க.