| நன்னூல் விருத்தியுரை | செய்யுளடி பலவினையும் தொகுத்துக் கூறாது மூன்றும் ஒன்றுமாகப் பிரித்தது என்னை எனின் எண்வகைப்பட்ட பொருள்கோளும் அவற்றின் விகற்பங்களும் ஆய பொருள்கோள்களுள் ஒன்று ஒரு செய்யுள் முழுவதூஉம் அமைந்து கிடக்க வேண்டும் என்னும் யாப்புறவின்றி, ஒன்றும் பலவும் அமைந்து கிடத்தலின் என்க. அவ்வாறு அமைந்து கிடத்தல் அவ்வப் பொருள்கோட்குக் காட்டிய செய்யுட்கண்ணும் பிற செய்யுட்கண்ணும் கண்டுகொள்க. அடி மறித்தலன்றி மாற்றுதல், ‘ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்’ என்றதற்கு இன்றாம். அங்ஙனம் ஆக அதனையும் அடிமறிமாற்று என்றது என்னை எனின் மறித்தற்கு உரிய கொண்டுகூட்டோடும் மறித்தற்கும் மாற்றுதற்கும் உரிய அடிமறிமாற்றோடும் சார அதனை முதற்கண் கூறி, அடியாக மறித்தல் உடைமையின் அடிமறிமாற்றின்பாற் படுத்துச், சில உறுப்புக் குறைந்தாரையும் மக்கள் என்றாற்போல அதற்கும் அடிமறிமாற்று எனப் பெயர் தந்து கூறினார் என்க. செய்யுட்கு உரிய பொருள்கோளை ஈண்டுக் கூறியது என்னை416 எனின் செய்யுட்குத் தொடர் என்னும் காரணக்குறி போந்தது மொழி தொடர்ந்ததால் அன்றே? அங்ஙனம் ஆதலின் இதுவும் தொடர்மொழி இலக்கணமேயாம் என்க. (68) | | பொதுவியல் முற்றிற்று | ------------------------------- 416இவ்வினாவிற்கு மயிலைநாதர் (நன். 418) உதாரணத்தோடு சற்று விரிவாக விடை கூறுதல் காண்க. | |
|
|