பக்கம் எண் : 494
  

நன்னூல் விருத்தியுரை
 

நான்காவது
 

இடையியல்
 

இடைச்சொல்லின் பொது இலக்கணம்
 

{420}

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள விசைநிறை யசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்
தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்.
 
     எ-னின், “இடையுரி யடுத்து, நான்குமாம்” (நூ. 270) என நிறுத்த முறையானே
இடைச்சொல் இலக்கணம் இவ்வியலால் உணர்த்துவான் தொடங்கி, அவை இத்துணைய;
இவ்வியல்பின என அவற்றின் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: எழுவாயுருபு முதலிய எட்டு வேற்றுமை உருபுகளுள் (292) பெயரும்
பெயரது விகாரமும் ஆகிய எழுவாயும் விளியும் ஒழித்து, ஒழிந்த ஐ முதலிய
ஆறு உருபுகளும்
(152) பகுதி, விகுதி, இடைநிலை என்னும் தெரிநிலையும் குறிப்பும்
ஆகிய வினையுருபுகளுள் முதனிலைத் தனிவினைப்பெயரும் பொருளாதி
அறுவகைப் பெயரும் ஆகிய பகுதி ஒழித்து, ஒழிந்த விகுதி முதலிய
வினையுருபுகளும்
(140, 142-145; 340, 341, 343) அன், ஆன் முதலிய
சாரியையுருபுகளும் (244) போலப், புரைய முதலிய உவமவுருபுகளும் (367) பிறவாறு
தத்தமக்கு உரிய பொருளை உணர்த்தி வருவனவும் (422-425; 428, 431-433; 435, 437,
438) வேறு பொருளின்றிச் செய்யுள் இசை நிறைத்தலே பொருளாக வருவனவும் (422,
436) அசைத்தலே பொருளாக நிற்பனவும் (422, 423, 432, 433, 435, 437, 439-441)
வெளிப்படையின் வரும் இவை போலாது குறிப்பின் வருவனவும் (424) என்னும் எட்டு
வகையினை உடையவாய்த் தனித்து நடத்தலின்றிப் பெயரின் அகத்தும் வினையின்
அகத்தும் அவற்றின் புறமாகிய பின்னும் முன்னும் இவ்விடங்கள் ஆறனுள்417 ஓர்
இடத்து ஒன்றேனும் பலவேனும் வந்து, அப்பெயர்வினைகட்கு அகத்துறுப்பாயும்
புறத்துறுப்பாயும் ஒன்றுபட்டு நடக்கும் தன்மையது இடைச்சொல்லாம் எ-று.

     தெரிநிலைவினை இடைநிலைபோல ஏனை இடைநிலை சாரியைகட்கு வேறு
பொருள் இன்றேனும் பெயர்வினைகட்கு இன்றியமையாது வருதலே பெரும்பால
ஆதலின் அவற்றின் பொருளே பொருள் என்பது கருதி, இசைநிறை அசைநிலைகளைச்
சார வையாது முதற்கண் வைத்தார் என்க.
------------------------------
     417பெயரின் அகத்தும் வினையின் அகத்தும் அவற்றின் புறமாகிய பெயரின் பின்னும் பெயரின் முன்னும் வினையின் பின்னும் வினையின் முன்னும் ஆகிய ஆறு இடங்கள்.