பக்கம் எண் : 495
  

நன்னூல் விருத்தியுரை
 

     ‘பெயரினும் வினையினும்’ என்ற உம்மையைப், ‘பின்முன்’ என்பனவற்றோடும்
கூட்டுக.

     இச்சொற்கள் முதற் கூறிய418 <பெயர்ச்சொல் வினைச்சொற்களும்419 ஆகாது
அவற்றின் வேறும் ஆகாது இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனக்
காரணக்குறி பெற்றன. இது பாலைத்திணை நடுவுநிலைத்திணை> எனப் பெயர் பெற்றது
போலும் என்க.

     <அற்றேல் பாலைத்திணை420 நடுவுநிலைத்திணை என்று ஆயவாறு என்னை
எனின் ஆசிரியர் தொல்காப்பயிர்,
 
  “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”
(தொல். அகத். 11)
 
எனக் கூறியவழி அங்ஙனம் நடுவுநிலைத்திணை என்னும் சொல்லே தன் காரணம்
இனிது விளக்கி நிற்றலான் அது நடுவு நிற்றல் காரணத்தான் பெற்ற பெயர் என்பது
பெற்றாம். இன்னும் அவ்வாசிரியர் ஏனை நாற்றிணையும் முறையானே கூறி, இறுதிக்கண்
ஓதுதலான் இஃது அவற்றின் வேறு என்பது விளங்குதலானும் எஞ்ச நின்றது பாலையே
ஆகலானும்,
 
  “நடுவ ணைந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே” (தொல். அகத். 2)
 
என நிலம் பகுத்து ஓதுங்கால் நடுவணது எனக் குறியிட்டமையானும் அங்ஙனம்
பகுக்கப்படும் நிலங்களும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது தனக்கு உரிய நிலம்
நடுநிகர்த்ததாய் நிற்றல்பற்றி நடுவுநிலைத்திணை எனக் குறியீடு பெற்றது எனக்
கொள்க.> இங்ஙனம் இதன் திறம்421 விரிக்கின் பெருகும். அது நிற்க.

     இனி இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனக் காரணக்குறி போந்ததூஉம்
அன்றித், தனித்து நடத்தலின்றிப் பெயர்வினைகள் இடமாக நடத்தலின் இடைச்சொல்
எனக் காரணக்குறி போந்தது எனினும் அமையும். அது முதல்நூலின் வழியாக நடக்கும்
நூலை அங்ஙனம் கூறாது வழிநூல் என்றாற்போலப்
------------------------------
     418 “முற் கூறிய” என்பதும் பாடம்.
     419 தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 65).
     420 தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 66-68).
     421 “இன்னம் இதன் திறம்” என்பதும் பாடம்.