பக்கம் எண் : 497
  

நன்னூல் விருத்தியுரை
 

     இ-ள்: தெரிநிலை முதலாக விதந்த பதினான்கும் இவை போல்வன பிறவும் மேல்,
“தத்தம் பொருள” (நூ. 420) என்ற இடைச்சொற் பொருள்களாம் எ-று.

     ‘இன்னன’ என்றதனால் சில வருமாறு: அக்கொற்றன், எக்கொற்றன் என்பன
சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் தந்தன. நக்கீரர், நப்பாலத்தனார் என்புழி நகர
இடைச்சொல் சிறப்புப்பொருள் தந்தது. “அஆ, இழந்தானென் றெண்ணப் படும்”
(நாலடி. 9:3-4), “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோடு” (யா. வி. 41), “அந்தோ
விசையை பட்டனள்” (சீவக. 312:1*),
 
  “அரக்காம்ப னாறும்வா யம்மருங்கிற் கன்னோ
பரற்கான மாற்றின கொல்லோ” (நாலடி. 396:1-2)
 
என்புழி அஆ, ஆஅ, அந்தோ, அன்னோ என்னும் இடைச்சொற்கள்
இரங்குதற்பொருள் தந்தன. இவற்றிற்கு அதிசயப்பொருளும் உள. “அறிதோ றறியாமை
கண்டற்றால்” (குறள். 1110), “சேரி தொறிது செல்வத் தியற்கையே” (சீவக. 129:4*)
என்புழித்தோறு, தொறு என்னும் இடைச்சொற்கள் இடப்பன்மைப் பொருள் தந்தன.
இனிச் செய்வான், இனி எம் எல்லை என்புழி இனி என்னும் இடைச்சொல்
காலப்பொருளும் இடப்பொருளும் முறையே தந்தது. பிறவும் இவ்வாறு தனித்து நடக்கும்
பெயர், வினை ஆகாது வருவன எல்லாம் கொள்க.(2)
 

ஏகார இடைச்சொல்
 

{422}

பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே.
 
     எ-னின், வேற்றுமை உருபு முதலிய நான்கும் மேலே (420) சொல்லப்பட்டமையின்
அவற்றை ஒழித்து, ஏனையவற்றை423 உணர்த்துவான் தொடங்கி, அவற்றுள் ஏகார
இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: தெரிநிலை முதலிய பதினான்கும் (421) அவை போல்வன பிறவும் ஆகிய
பொருள்களுள்ளும் இசை நிறைத்தல், அசைத்தல், குறிப்பு என்னும் மூன்று
பொருள்களுள்ளும் (420) பிரிநிலை முதலிய ஆறு பொருளையும் தரும் ஏகார
இடைச்சொல் எ-று.
-------------------------------
     423வேற்றுமை உருபு முதலிய நான்கு: ஐ முதலிய ஆறு வேற்றுமை
உருபுகள், விகுதி முதலிய வினையுருபுகள், சாரியையுருபுகள், உவமவுருபுகள்
ஆகியன. ஏனையவை: தத்தம் பொருள் உணர்த்துவன, இசைநிறைப் பொருளன,
அசைநிலைப் பொருளன, குறிப்பின் வருவன என்னும் நான்கு.