| நன்னூல் விருத்தியுரை | வ-று: அவனே கொண்டான் என்பது ஒரு குழுவினின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை, இவ்வேகாரம் அவனே கொண்டான் என்னும் பொருள்பட வினாவி நிற்பின் வினா. நிலனே நீரே தீயே வளியே என்பது நிலனும் நீரும் தீயும் வளியும் என்னும் பொருள்பட எண்ணி நிற்றலின் எண். “கடல்போற் றோன்றல காடிறந் தோரே” (அகம் 1:19) என்பது சொல்லிறுதிக்கண் அசைத்தற்பொருள் தருதலின் ஈற்றசை. இவ்வேகார அசைநிலை முதற்கண் வாராது என்பார், ‘ஈற்றசை’ என்றார். அவனே கொண்டான் என்பது துணிதற்பொருள் தரின் தேற்றம். இத்தேற்றப்பொருள் பிரிநிலைக்கண்ணே உளது ஆதலின் இப்பொருளை வேறு எடுத்துக் கூறுதல் ஏனையபோற் சிறப்பு உடைத்து அன்று என்பார் இதனைப் பொருட்சிறப்பு இல்லா ஈற்றசைக்கும் இசைநிறைக்கும் இடையே கூறினார். “ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார்” (சீவக. 652:4*) என்பது இசை நிறைத்தற் பொருள் தருதலின் இசைநிறை. அவனே கொண்டான் என்பது ஒரோவழி அவன் கொள்கிலன் என எதிர்மறைப்பொருள் தரின் அது செம்பொருளன்றி வலிந்து கொள்ளப்படுதலின், “புதியன புகுதலும், வழுவல” (நூ. 462) என்பதன்பாற் படுத்துக. (3) | | ஓகார இடைச்சொல் | | 423. | ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. | எ-னின், ஓகார இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒழியிசை முதலிய எட்டுப் பொருளையும் தரும் ஓகார இடைச்சொல் எ-று. வ-று: கொளலோ கொண்டான் என்பது கொண்டுய்யப் போயினான் அல்லன் என்றல் தொடக்கத்து ஒழிந்த சொற்களைத் தருதலின் ஒழியிசை. குற்றியோ மகனோ என்பது வினா. சிறப்பு உயர்வுசிறப்பு, இழிவுசிறப்பு என இருவகைத்து. ஓஒ பெரியன் என்பது உயர்வுசிறப்பு. ஓஒ கொடியன் என்பது இழிவுசிறப்பு. அவனோ கொண்டான் என்பது கொண்டிலன் என்னும் பொருள் தந்தவழி எதிர்மறை. அலியை நோக்கி ஆணோ அதுவும் அன்று, பெண்ணோ அதுவும் அன்று என்பது அத்தன்மை இன்மை தெரிந்தவழி நிற்றலின் தெரிநிலை. உறுதி உணராது கெட்டாரை, “ஓஒ தமக்கோ ருறுதி யுணராரோ” (நன். 422 மயிலை.) என்பது கழிவிரக்கப்பொருள் தருதலின் கழிவு. “காணிய வம்மினோ கங்குலது நிலையே” (நன். 422 மயிலை.) என்பது அசைநிலை. அவனோ கொண்டான் என்பது பலருள்நின்றும் ஒருவனைப் பிரித்தமை கருதியவழிப் பிரிநிலை. இப்பொருள் எதிர்மறைக்கண்ணே உளது ஆதலின் அசைநிலையின் பின் வைத்தார். | |
|
|