பக்கம் எண் : 499
  

நன்னூல் விருத்தியுரை
 

என என்று என்னும் இடைச்சொற்கள்
 

424.

வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும்
எனவெனு மொழிவரு மென்று மற்றே.
 
     எ-னின், என எனவும் என்று எனவும் வரும் இடைச்சொல் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: வினைப்பொருள் முதலிய ஆறு பொருளினும் என என்னும் இடைச்சொல்
வரும். என்று என்னும் இடைச்சொல்லும் அவ்வாறு வரும் எ-று.

     வ-று: கொள்ளெனக் கொண்டான், மைந்தன் பிறந்தான் எனத் தந்தை உவந்தான்
என்பது வினை. “ஊர் எனப்படுவது உறையூர்” (யா. வி. 1), “அழுக்கா றெனவொரு
பாவி” (குறள். 168) என்பது பெயர். விண்ணென விசைத்தது, “பொள்ளென வாங்கே
புறம்வேரார்” (குறள். 487) என்பது குறிப்பு. ஒல்லென ஒலித்தது, “நிலையருங்
குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து” (புறம். 243:9*) என்பது இசை. நிலனென நீரெனத்
தீயென வளியென வரும் பூதம் நான்கும் உருவம் என்பது எண். வெள்ளென
விளர்த்தது, மெல்லென நடந்தது என்பது பண்பு. இங்ஙனம் எண்ணுப்பொருட்குக்
காட்டிய பெயர்கள் தனித்து நில்லாது எண்ணி, அளவைப் பண்புப்பொருள்
உணர்த்தலின் அப்பொருள் முதற்கண் நிறீஇய பெயர்ப்பொருள் அன்று என்க. என்று
என்பதனையும் கொள்ளென்று கொண்டான் என முறையே இயையுமாறு ஒட்டுக.

     சுட்டுப்பெயர் வினாப்பெயர்கட்குத் தமக்கு என ஒரு பொருளின்றிச் சுட்டவும்
வினவவும் படும் பொருளாதி ஆறு பெயர்ப்பொருளே (132, 276) பொருளாக
வருதல்-போல இவ்விரண்டு இடைச்சொற்கும் தமக்கு என ஒரு பொருளின்றி வினை
முதலியவாய் இங்ஙனம் விதந்தவற்றின் பொருளே பொருளாக வரும் என்பார் ஆறு
பொருளையும் தரும் என்னாது, ‘ஆறினும் வரும்’ என்றார். (5)
 

உம்மை இடைச்சொல்
 

425.

எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை
தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே.
 
     எ-னின், உம்மை இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: எதிர்மறை முதலிய எட்டுப் பொருளையும் தரும் உம்மை
இடைச்சொல் எ-று.

     வ-று: கொற்றன் வருதற்கும் உரியன் என்பது எதிர்மறை. “குறவரு மருளுங்
குன்று” (மலைபடு. 275*), இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது என்பது உயர்வுசிறப்பு.