பக்கம் எண் : 500
  

நன்னூல் விருத்தியுரை
 

பார்ப்பானும் கள் உண்டான், “புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை”
(அரிச்.மயான. 128:1*) என்பது இழிவுசிறப்பு.

     பூசையும் புலால் தின்னாது என்பதனை இழிவுசிறப்பு என்பாரும்424 உளர்.
அங்ஙனம் ஆயின் ஒரு பொருளினது உயர்வைச் சிறப்பித்தல், இழிவைச் சிறப்பித்தல்
எனப் பொருள்படாது, உயர்ந்த பொருளான் மற்றொன்றைச் சிறப்பித்தல், இழிந்த
பொருளான் மற்றொன்றைச் சிறப்பித்தல் எனப் பொருள்படும். அவ்வாறு பொருள்படின்
ஓகாரப் பொருளாய் வரும் உயர்வுசிறப்பிற்கும் இழிவுசிறப்பிற்கும் (423) ஆகாமையின்
அது பொருந்தாது என்க. இனி இவ்வும்மைப் பொருளைக் குன்று முதலியவற்றிற்
கொள்ளாது குறவர் முதலியவற்றிற் கொண்டு, பூசையும் என்பதனை இழிவு சிறப்பும்மை
எனக் கோடலும் ஒன்று. இங்ஙனம் இழிவுசிறப்பு என்பதற்கு இழிவினுள் சிறந்த இழிவு
எனப் பொருள் கூறுக. உயர்வுசிறப்பும் அது. பூசைக்குப் புலால் தின்னுதல் இழிபும்
தின்னாமை சிறப்புமாகப் பொருள் கொளின் குறவர்க்கு மருளுதல் சிறப்பாக வேண்டும்;
ஆதலின் அது பொருந்தாது என்க.

     பத்தானும் எட்டானும் கொடு என்பது ஐயம். சாத்தனும் வந்தான் என்பது
கொற்றன் வந்ததன்றி எனப் பொருள்படின் இறந்தது தழீஇய எச்சவும்மை; கொற்றனும்
வருவான் எனப் பொருள்படின் எதிரது தழீஇய எச்சவும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும்
வந்தார், எல்லாரும் வந்தார் என்பது முற்றும்மை. சாத்தனும் கொற்றனும் தேவனும்
பூதனும் வந்தார் என்பது எண்ணும்மை. ஆணும் அன்று; பெண்ணும் அன்று என்பது
தெரிநிலையும்மை. தெரிநிலை ஓகாரம்போல் (423) பொருள் உரைத்துக்கொள்க.
நெடியனும் ஆயினான், பாலும் ஆயிற்று என்புழி அவனே வலியனும் ஆயினான்.
அதுவே மருந்தும் ஆயிற்று எனப் பொருள்படின் ஆக்கவும்மை. (6)
 

முற்றும்மைக்குச் சிறப்புவிதி
 

426.

முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்.
 
     எ-னின், முற்றும்மைக்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: முற்றும்மை ஒரோவிடங்களின் எச்சவும்மையும் ஆம் எ-று.

     வ-று: “ஆறுந் தருவது வினையே” (நன். 320) என்புழி ஐந்தும் தருவது வினையே
---------------------------------
     424நச்சினார்க்கினியர், கல்லாடர் (தொல். இடை. 7), வைத்தியநாத
தேசிகர் (இல. விள. 256) முதலியோர் இழிவுசிறப்பு என்பர்.