பக்கம் எண் : 501
  

நன்னூல் விருத்தியுரை
 

என்றும் எல்லாரும் இது செய்யார் என்புழிச் சிலர் இது செய்வார் என்றும் முற்றும்மைப்
பொருளும் எச்சவும்மைப் பொருளும் ஒருங்கு தருதல் காண்க. இங்ஙனம் தருதலின்,
‘எச்சமும்’ என இறந்தது தழீஇய எச்சவும்மையால் கூறினார். (7)
 

செவ்வெண்ணின்கண் எச்சவும்மை வருமாறு
 

427.

செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை.

    
எ-னின், எச்சவும்மைக்கு ஆவதோர் விதி உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: எச்சவும்மை செவ்வெண்ணின்கண் வரும் ஆயின் ஈற்றின்கண் வரும் எ-று.

     வ-று:

          செய்பவன்425 கருவி நிலஞ்செயல் காலஞ்
          செய்பொரு ளுந்தருந் திறத்தது வினையே

என்புழி இவற்றுள் சிலவும் தரும் திறத்தது வினையே எனவும் கல்வி, செல்வம், ஒழுக்கம்,
குடிப்பிறப்பும் பெறுவாரும் உளர் என்புழி இவற்றுள் சில பெறுவாரும் உளர் எனவும்
பொருள்படுதல் காண்க. (8)
 

சில எண்ணிடைச்சொற்களுக்கு இலக்கணம்
 

    {428} பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனாவெண்
ணான்குந் தொகைபெறு மும்மையென் றெனவோ
டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும்.

     எ-னின், முன்னர் எடுத்து விதந்தும் விதவாதும் வரும் சில எண்ணிடைச்சொற்கட்கு
ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பெயர்களினிடையே எண்ணிடைச்சொல் தொக்கு நிற்ப வரும்
செவ்வெண்ணும் பெயரோடு தொகாது வரும் ஏகாரவெண்ணும் என்றாவெண்ணும்
எனாவெண்ணும் ஆகிய நான்கும் தொகை பெற்று நடக்கும். உம்மையெண்ணும்
என்றெண்ணும் எனவெண்ணும் ஓடெண்ணும் ஆகிய இந்நான்கு எண்ணும் தொகை
பெற்றும் பெறாதும் நடக்கும் எ-று.
--------------------------------
     425இது, “செய்பவன் கருவி” என்னும் வினையியல் நூற்பாவின் (320)
பாடபேதமாக இருக்கலாம் என்று சாமிநாதையர் (1935 பக். 411), தண்டபாணி
தேசிகர் (1957 பக். 462; 1971 பக். 614) முதலியோர் கருதுவர். அதற்குத் தக்க
சான்று இல்லை.