பக்கம் எண் : 502
  

நன்னூல் விருத்தியுரை
 

     பெயரெண் என்னாது, ‘செவ்வெண்’ என்றதனால் அஃது எண்ணிடைச்சொல்
தொக்க தொகைநிலை என்பதூஉம் அங்ஙனம் ஆதலின் அதனையும் ஏகாரம் முதலிய
எண்ணிடைச்சொற்களோடு உடன் கூறப்பட்டது என்பதூஉம் பெற்றாம்.

     வ-று: சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார், சாத்தனே கொற்றனே
தேவனே பூதனே நால்வரும் வந்தார், சாத்தனென்றா கொற்றனென்றா தேவனென்றா
பூதனென்றா நால்வரும் வந்தார், சாத்தனெனாக் கொற்றனெனாத் தேவனெனாப்
பூதனெனா நால்வரும் வந்தார். இவை தொகை பெற்றே வந்தன. பெயர்ச் செவ்வெண்
தொகை பெறுதற்கு இச்சூத்திரத்தைக் காட்டினும் அமையும்.

     இவை வழக்கிடத்து ஒரோவழித் தொகை பெறாது வரின் இசையெச்சமாகவும்
செய்யுட்கண் தொகை பெறாது வரின், “தொகுக்கும்வழித் தொகுத்த”லாய்
(தொல். எச்ச.7) அமையின் அவ்விகாரமாகவும் அன்றேல் இசையெச்சமாகவும் கொள்க.

     சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும் நால்வரும் வந்தார், சாத்தனென்று
கொற்றனென்று தேவனென்று பூதனென்று நால்வர் உளர், சாத்தனெனக் கொற்றனெனத்
தேவனெனப் பூதனென நால்வர் உளர், சாத்தனோடு கொற்றனோடு தேவனோடு
பூதனோடு நால்வர் இவன் மைந்தர் எனவும் சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும்
வந்தார், நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்று அளவறு காயமென்று ஆகிய
உலகம், நிலனென நீரெனத் தீயெனக் காற்றென அளவறு காயமென ஆகிய உலகம்,
நிலனோடு நீரோடு தீயோடு காற்றோடு அளவறு காயமோடு ஆகிய பூதம் எனவும் இவை
தொகை பெற்றும் பெறாதும் வந்தன. (9)
 

சில எண்ணிடைச்சொற்களுக்குச் சிறப்புவிதி
 

429.

என்று மெனவு மொடுவு மொரோவழி
நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்.

    
எ-னின், எண்ணிடைச்சொல்லுள் சிலவற்றிற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இம்மூன்று எண்ணும் எண்ணும் பொருள்தோறும் நிற்றலே அன்றி, ஓர்
இடத்து நின்றும் பிரிந்து எண்ணும் பொருள்தோறும் பொருந்தும் எ-று.

     வ-று:

     “வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்கால்
     தீயெச்சம் போலத் தெறும்” (குறள். 674),