| நன்னூல் விருத்தியுரை | “பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவா மில்லிறப்பான் கண்” (குறள். 146), “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருடீர வெண்ணிச் செயல் (குறள். 675) என வரும். எண்ணும் பொருள்தோறும் தனித்தனி நிற்றலினும் ஒரோவழி நின்று பிரிதல் இம்மூன்று எண்ணிற்கும் அமைந்து கிடந்தன ஆதலின் ஈண்டும் கூறப்பட்டன. எனவே ஏனை எண்கட்கு எண்ணும் பொருள்தோறும் நிற்கும் நிலையே சிறந்தன என்பதூஉம் ஒரோவழி நின்று பிரிதல் வலிந்து கொளற்பாலன என்பதூஉம் அவை ஈண்டு அமையாது, தீவகம்426 என்னும் அணியிலக் கணத்தின்பாற் படும் என்பதூஉம் பெற்றாம். (10) | | எண்ணிடைச்சொற்கள் வினையோடு வருதல் | | {430} | வினையொடு வரினுமெண் ணினைய வேற்பன. | எ-னின், மேல் பெயரோடு வந்த எண்ணிடைச்சொற்கள் வினையோடு வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எண்ணிடைச்சொற்கள் வினையோடு வரினும் மேல் பெயரோடு வந்தாற் போலும் ஏற்பன எ-று. ‘ஏற்பன’ எனவே வினையோடு ஏலா எண் வருதலும் தொகை பெறுதலும் இல்லை என்க. வ-று: “மண்டில மழுங்க மலைநிறங் கிளர வண்டின மலர்பரந் தூத மிசையே கண்டற் கானங் குருகின மொலிப்ப” (அகம். 260:1-3*) --------------------------------- 426செய்யுளின் முதல், இடை, கடை என்னும் ஓர் இடத்து நின்ற சொல் ஏனை இடத்து நின்ற சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது (வீர. 150; தண்டி. 40; மாறன். 160) தீவக அணி. விளக்கணி என்பது தமிழ் வழக்கு. | |
|
|