| நன்னூல் விருத்தியுரை |
காலம். “வருகதில் லம்மவெஞ் சேரி சேர” (அகம். 276:7) என்பது வந்தால் ஒன்று செய்வல் என்னும் சொல் ஒழிந்து நிற்றலின் ஒழியிசை. (12) |
| மன் இடைச்சொல் |
| 432. | மன்னே யசைநிலை யொழியிசை யாக்கங் கழிவு மிகுதி நிலைபே றாகும். |
எ-னின், மன் என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ் ஆறு பொருளையும் தரும் மன் என்னும் இடைச்சொல் எ-று. வ-று: “அதுமன் கொண்கன் றேரே” (தொல். இடை. 47 இளம்.) என்பது அசைநிலை. “கூரியதோர் வாண்மன்” (தொல். இடை. 4 இளம்.) என்புழி அதனாற் கருந்தாது அறத்துணித்தது என்னும் சொல் ஒழிய நின்றமையின் ஒழியிசை. “நெடியன்மன்” (வி. மே.) என்புழி அவனே வலியனும் ஆயினான் எனப் பொருள் தரின் ஆக்கம். “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே” (புறம். 235:1) என்புழி இப்பொழுது அவன் இறத்தலின் எமக்கு ஈதல் கழிந்தது எனப் பொருள் தருதலின் கழிதல். “எந்தை யெமக்கருளுமன்” (வி. மே.) என்புழி மிகுதியும் அருளும் எனப் பொருள் தருதலின் மிகுதி. “மன்னா வுலகத்து மன்னியது புரைமே” (கலி. 54:20*) என்புழி இவ்விடைச்சொல் அடியாகப் பிறந்த வினையுள் மன் என்பது நிலையினை உணர்த்தினமையின் நிலைபேறு. (13) |
| மற்று இடைச்சொல் |
| 433. | வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. |
எ-னின், மற்று என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இம்மூன்று பொருளையும் தரும் மற்று என்னும் இடைச்சொல் எ-று. வ-று: “மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது” (நாலடி. 19:1) என்பது விரைந்து அறிவாம் என்னும் வினையை ஒழித்து, விரையாது அறிவாம் என்னும்வினையைத் தந்து நின்றமையின் வினைமாற்று. “மற்றடிகள் கண்டருளிச் செய்ய மலரடிக்கீழ்” (சீவக. 1873:1*) என்பது அசைநிலை. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” (குறள். 380) என்பது ஊழல்லது ஒன்று என்னும் பொருள் தந்தமையின் பிறிது. (14) |