| நன்னூல் விருத்தியுரை | | மற்று இடைச்சொல்லுக்குப் புறனடை | | {434} | மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். | எ-னின், மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற் கூறிய மற்று என்னும் இடைச்சொற் பொருள் மூன்றனுள் மற்றையது என்னும் பொருளாகிய வினைமாற்றும் பிறிதும் அங்ஙனம் கருதியதற்கு இனமாகிய வினைமாற்றும் இனமாகிய பிறிதும் ஆமன்றி வேறு வினைமாற்றும் வேறு பிறிதும் அல்லவாம் எ-று. மேற் காட்டிய (433) உதாரணத்துள் நல்வினையை விரைந்து அறிவாம் எனக் கருதியதற்கு விரையாது அறிவாம் எனவும் ஊழ் ஒன்று எனக் கருதியதற்கு ஊழல்லது ஒன்று எனவும் இனம் வந்தவாறு காண்க. வேறு பிறிதாவது என்னை எனின் இரண்டு மணி உள்வழி ஒன்று கண்டான் மற்றொன்று காண வேண்டும் என்றான் ஆகின் மற்றொன்று என்பதற்கு இனம் ஆகியதோர் மணி எனப் பொருள் கொள்ளாது ஆடை, அணி எனப் பொருள் கோடல் என்க. வினைமாற்றும் இவ்வாறே காண்க. மேலைச் சூத்திரத்துள் வினைமாற்று எனவும் பிறிது எனவும் பொதுப்படக் கூறினமையின் இச்சூத்திரத்தால் புறனடை கொடுத்துக் காத்தார் என்க. இச்சூத்திரத்திற்கு இவ்வாறன்றி, மற்றையது என்பதனை ஒர் இடைச்சொல்லாக வைத்து அச்சொல் அங்ஙனம் கருதிய பொருட்கு இனமாகிய பொருளைத் தரும் எனப் பொருள் கூறுவாரும்429 உளர். மற்றையது என்பது இடைச்சொல் அடியாகப் பிறந்த பெயரும் வினைக்குறிப்பும் ஆம் ஆதலானும் விகுதி கூறினாரேனும்430 பகுதிப்பட்ட மற்றை என்னும் ஐகாரவீற்று இடைச்சொற்கு இப்பொருள்431 கூறினார் எனின் மன் மன்னை, கொன் கொன்னை என நின்றாற்போல மற்று மற்றை என இறுதி விகாரமாய் நின்றதன்றி இதற்கு என வேறு பொருள் இன்மையானும் அதனோடு இதற்கு வேற்றுமை இஃது இனத்தையே தருதல் எனப் பொருள் கொளின் மற்று -------------------------------- 429மயிலைநாதர் (நன். 433) மற்றையது என்பதனைத் தனி இடைச்சொல்லாகக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுவார். 430“விகுதியோடு கூறினாரேனும்” என்பதும் பாடம். 431சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் (தொல். இடை. 16) முதலியோர் மற்றை என்பதனை ஐகாரவீற்று இடைச்சொல்லாகக் கொள்வர். அதோடு, “மேல் வினைமாற்று என்றார்; இது பொருள்மாற்று என்பதனை விளக்குதற்கு அது என்பதனைக் கூட்டி உரைத்தார்.” என்று தெய்வச்சிலையார் நயவுரையும் கூறுவார். | |
|
|