| நன்னூல் விருத்தியுரை |
என்பது இனத்தையும் இனம் அல்லதையும் தரும் எனப் பொருள்படும் ஆதலானும் எல்லாவற்றானும் இனமாய் உள்ளதே வினைமாற்றும் பிறிதுமாய் வருமன்றி இனம் அல்லது ஒருவாற்றானும் வாராமையானும் அது பொருந்தாது என்க. (15) |
| கொல் என்னும் இடைச்சொல் |
| 435. | கொல்லே யைய மசைநிலைக் கூற்றே. |
எ-னின்432 கொல் என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கொல் என்பது இவ்விரண்டு பொருளையும் தரும் சொல்லாம் எ-று. வ-று: இவ்வுருக் குற்றிகொல் மகன்கொல் என்பது குற்றியோ மகனோ என்னும் பொருள்பட வருதலின் ஐயம். “பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாய்” (கலி. 11:4-5) என்பது அசைநிலை. (16) |
| ஒடு தெய்ய என்னும் இடைச்சொற்கள் |
| 436. | ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே. |
எ-னின், ஒடு எனவும் தெய்ய எனவும் வரும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவ்விரண்டும் இசை நிறைத்தற் பொருளைத் தரும் சொற்களாம் எ-று. வ-று: “முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுள” (குறுந். 155:1-2) எனவும், “சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்த்தே” (தொல். இடை. 48* சேனா.) எனவும் வரும். (17) |
| அந்தில் ஆங்கு என்னும் இடைச்சொற்கள் |
| 437. | அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே. |
---------------------------------- 432இது தொல்காப்பிய (இடை. 20) நூற்பாவின் திரிபு. |