பக்கம் எண் : 508
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், அந்தில் எனவும் ஆங்கு எனவும் வரும் இடைச்சொல் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இவ்விரண்டு இடைச்சொல்லும் அசைநிலைப் பொருளவாயும்
இடப்பொருளவாயும் வரும் எ-று.

     வ-று:
 
               “அந்திற்
கழலினன் கச்சினன்”
(அகம். 76:6-7*)
 
     என்பது அசைநிலை.

          “வருமே சேயிழை யந்திற்
          கொழுநற் காணிய” (குறுந். 293:7-8*)

என்பது அவ்விடத்து என்னும் பொருள் தருதலின் இடம்.

     “ஆங்கத்,
     திறனல்ல யாங்கழற” (கலி. 86:25-26*)

என்பது அசைநிலை. இதனுள் ஆங்கு என்னும் அசைநிலை ஆங்க என இறுதி
விகாரமாய் நின்றது. “ஆங்காங் காயினு மாக” (முருகு. 250*) என்பது இடம். (18)
 

அம்ம என்னும் இடைச்சொல்
 

     438. அம்ம வுரையசை கேண்மினென் றாகும்.

     எ-னின், அம்ம என்னும் இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: அம்ம என்பது உரையசைப் பொருளதாயும்433 ஒன்று சொல்வன் கேண்மின்
என்னும் ஏவற் பொருளதாயும் வரும் எ-று.

     வ-று: “அதுமற் றம்ம” (வி. மே.) என்பது உரையசை. இது செய்யுட்கண் வரினும்
அச்செய்யுளின்பொருட்டன்றித் தான் அடைந்த சொல்லின்பொருட்டு வருதலின்
உரையசை ஆயிற்று. “அம்ம வாழி தோழி” (நற். 158:1) என்பது ஒன்று சொல்வன் கேள்
என்னும் ஏவற்பொருள் தந்தது. (19)
-------------------------------
     433“சிறிது பொருள் உணர்த்துவனவற்றை உரையசை என்றும் பொருள்
உணர்த்தாது, சொற்களை அசைத்து நிற்பனவற்றை அசைநிலை” என்றும்
நச்சினார்க்கினியர் (தொல். இடை. 29) இவை இரண்டையும் வேறுபடுத்துவார்.