| நன்னூல் விருத்தியுரை | | ஐந்தாவது உரியியல் உரிச்சொல்லின் பொது இலக்கணம் | | {442} | பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். | எ-னின், நிறுத்த முறையானே (270) உரிச்சொல் இலக்கணம் இவ்வியலான் உணர்த்துவான் தொடங்கி, அவற்றின் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பண்புகள் குணப்பண்பும் (452, 454) தொழிற்பண்பும் (453, 455) ஆகிய இரண்டனுள் அடங்கும் ஆயினும் இசை, குறிப்பு, பண்பு435 எனப் பல வேறு வகைப்படுதலின் பல வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அங்ஙனம் உணர்த்துழி ஒரு சொல் ஒரு குணத்தை உணர்த்துவனவும் (456, 458, 459) பல குணத்தை உணர்த்துவனவுமாய் (457), ஏனைப் பெயர்வினைகளை விட்டு நீங்காவாய்ச், செய்யுட்கு உரியனவாய்ப், பொருட்கு உரிமை பூண்டு வருவன உரிச்சொல்லாம் எ-று. இவ்வாறு வருதல் மேற் காட்டும் உதாரணங்களுள் காண்க. இவையும் பண்புப்பெயர் ஆயினும் ஏனைப் பெயர் வினைகளை விட்டு நீங்காமையின் வேறு ஓதப்பட்டன என்பதூஉம் செய்யுட்கு உரியனவாய்ப் பொருட்கு உரிமை பூண்டன ஆதலின் இவற்றிற்கு உரிச்சொல் எனக் காரணக்குறி போந்தது என்பதூஉம் இவற்றின் இலக்கணம் கூறிய முகத்தான் உணர்த்தியவாறு காண்க. இசை- ஓசை. குறிப்பு- மனத்தான் குறித்து உணரப்படுவது. பண்பு - பொறியால் உணரப்படு்ம்436 குணம். இவற்றை அடக்கி நின்ற குணமும் தொழிலும் பொருள் எனவும் படும் ஆதலின் இவற்றை உணர்த்தும் உரிச்சொல்லும் பெயர்ச்சொல் எனப்படும். ஆதலின், ‘பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி’ என்றார். (1) -------------------------------- 435“இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி” (தொல். உரி. 1) என்பது தொல்காப்பியம். 436இந்நூற்பாவில் உள்ள புத்தம் புத்துரைப் பகுதிகளைச் சேனாவரையர் (தொல். உரி. 1) உரையோடு ஒப்பிடுக. | |
|
|