| நன்னூல் விருத்தியுரை |
| பண்பு |
| 443. | உயிருயி ரல்லதாம்* பொருட்குணம் பண்பே. |
எ-னின்437 மேல், “பண்பு” (நூ. 442) என்றார்; அஃது இஃது என உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உயிராகிய பொருளும் உயிர் அல்லாத பொருளும் என இருவகையுள் அடங்கும் உலகத்துப் பொருள்களின் குணங்கள் பண்பாம் எ-று. கடவுட்பொருளை ஒழித்தார் அதற்கு ஓர் குணம் இன்மையானும்438 உண்டேல் சுட்டப்பட்டு உலகப்பொருள் ஆம் ஆதலானும் என்க. (2) |
| உயிர்ப்பொருள் |
| {444} | மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின் ஓரறி வாதியா வுயிரைந் தாகும். |
எ-னின், மேல் உயிராகிய பொருள் என்றார்; அவை இவை எனத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இங்ஙனம் மெய் முதலாகக் கூறிய ஐம்பொறிகளானும் பரிசம், இரதம், கந்தம், உருவம், சத்தம் என்னும் ஐம்புலனையும் உணருங்கால் மெய்யால் பரிசத்தை உணரும் உணர்ச்சி ஒன்று முதலாகக் கீழ்ப் போன உணர்ச்சியும் கொண்டு, மேல் வரும் புலன்களை ஒன்றோடு ஒன்றாக உணர்தலின் ஓரறிவுயிர் முதலாக ஐந்து ஆம் அவ்வுயிர்439 எ-று. (3) |
| ஓரறிவுயிர் |
| {445} | புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர். |
எ-னின், மேற் கூறிய உயிர் ஐந்தனுள் ஓரறிவுயிர் இவை என உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: புல்லும் மரமும் முதலியன மெய்யால் பரிசித்துப் பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்களாம் எ-று. (4) --------------------------------- 437“உயிருயி ரில்லதாம்” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். 438திருவள்ளுவர் கடவுளை, “எண்குணத்தான்” (குறள். 9) என்ற தொடரால் குறிப்பார். 439“ஆறறி வதுவே அவற்றொடு மனனே” (மரபு. 27) என்பது தொல்காப்பியம். |