பக்கம் எண் : 514
  

நன்னூல் விருத்தியுரை
 

 ஈரறிவுயிர்
 

446.

முரணந் தாதிநா வறிவொடீ ரறிவுயிர்.
  
     எ-னின், ஈரறிவுயிர் இவை என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: இப்பியும் சங்கும் முதலியன கீழ்ப் போன மெய்யறிவே அன்றி நாவால்
இரதத்தை அறியும் அறிவோடு ஈரறிவுயிர்களாம் எ-று. (5)
 

 மூவறிவுயிர்
 

447.

சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்.

     எ-னின், மூவறிவுயிர் இவை என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: கறையானும் எறும்பும் முதலியன கீழ்ப் போன இரண்டு அறிவுகளே அன்றி
மூக்கால் கந்தத்தையும் அறியும் அறிவினோடு மூவறிவுயிர்களாம் எ-று.

     மேல், “ஒடு”வை (நூ. 446) ஈண்டும் வருவித்துக்கொள்க. (6)
 

 நாலறிவுயிர்
 

448.

தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர்.

     எ-னின், நாலறிவுயிர் இவை என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: தும்பியும் வண்டும் முதலியன கீழ்ப் போன மூன்று அறிவே அன்றிக்
கண்ணால் உருவத்தை அறியும் அறிவினோடு நாலறிவுயிர்களாம் எ-று. (7)
 

 ஐயறிவுயிர்
 

{449}

வானவர் மக்க ணரகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி* வுயிரே.

     எ-னின்440 ஐயறிவுயிர் இவை என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: வானவரும் மக்களும் நரகரும் விலங்கும் புள்ளும் முதலியன கீழ்ப் போன
நாலறிவே அன்றிச் செவியால் சத்தத்தை அறியும் அறிவினோடு ஐயறிவுயிர்களாம் எ-று.

     சித்துப்பொருள், சடப்பொருள் என்பார், “உயிருயி ரல்லதாம் பொருள்” (நூ.
----------------------------------
    440“யறிவொ டையறி” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம்.