பக்கம் எண் : 515
  

நன்னூல் விருத்தியுரை
 

443) எனக் கூறியவாறும் சித்தாகிய உயிரறிவு சடமாகிய உடலோடு கூடியவழியன்றி
நிகழாமையானும் அந்நிகழ்ச்சி கண்டல்லது உயிர் உண்டு என்பதூஉம் அதற்கு ஓர்
அறிவு உண்டு என்பதூஉம் தோன்றாமையானும் உயிரைப் பிரித்து ஓதாது, உடலோடு
கூட்டிப், “புன்மர முதல” (நூ. 445) என முறையே கூறியவாறும் அவ்வுயிரறிவு உடலோடு
கூடி நிகழ்வழி ஐம்பொறியானும் ஐந்தாய் நிகழ்தலின், ‘ஐயறிவு’ எனக் கூறியவாறும்
இவ் ஐம்பொறியும் எல்லா உடற்கண்ணும் ஒருங்கு நில்லாது, இங்ஙனம் கூறிய முறையே
(445-449) நின்று அறிவை நிகழ்த்தலின் உயிர்கள் பல ஆயினும் அறியும் வகையான்
உயிர் ஐந்து எனக் கூறியவாறும் காண்க.

     ஆசிரியர் தொல்காப்பியர், “மக்க டாமே யாறறி வுயிரே” (தொல். மரபு. 33)
எனக் கூறியிருக்க, மக்கள் முதலியோரை ஐயறிவுயிர் எனக் கூறல் மாறுகொளக்
கூறலாம்441 பிற எனின் மக்கள் முதலியோர் மன அறிவோடு ஆறறிவுயிர்
என்பது நோக்கி அன்றே முன்னர், “மக்க டேவர் நரக ருயர்திணை”
(நூ. 261)
எனக் கூறிப் போந்ததூஉம்; ஆதலின் இங்ஙனம் ஐம்புலன் மாத்திரையே நுகரும்
அறிவுடைய மக்கள் முதலியோரை விலங்கு முதலியவற்றோடு எண்ணி, ஐயறிவுயிர்
எனக் கூறினார் என உய்த்துணர்ந்து கொள்க. (8)

 

 உயிரல் பொருள்
 

450.

உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்து முயிரல் பொருளே.

     எ-னின், உயிரல் பொருளாவன இவை என உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: அறிவுமயமாம் உயிர் ஒன்றுமே அன்றி, அவ்வுடம்பு முதலிய உலகத்துப்
பொருள்கள் எல்லாம் உயிர் அல்லாத பொருள்களாம் எ-று.

     முன்னர் உயிர் மாத்திரையே கூறுவார் உடம்பொடு கூட்டிக் கூறினாரன்றி,
உடம்பையும் உளப்படுத்தி, உயிர்ப்பொருள் என்றார் அல்லர் என்பது இதனான்
உணர்க.(9)
 

புறனடை
 

{451}

 ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர்.

      எ-னின், மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
-------------------------------
     441இதற்கு மயிலைநாதர் (நன். 448) கூறும் அமைதியும் இவண் கருதத்
தக்கது.