பக்கம் எண் : 516
  

நன்னூல் விருத்தியுரை
 

     இ-ள்: பசுவுடம்பு எடுத்துழித் தன் கன்றினுக்கு இரங்கி, நன்கு இழைத்த உயிர்
அவ்வுடம்பு நீங்கிப் புலியுடம்பு எடுத்துழி இரங்காது, அக்கன்றினுக்கே தீங்கு இழைக்கும்.
ஆதலின் எவ்வுயிர் எவ்வுடம்பு எடுத்ததோ அவ்வுடம்பின் மயமாய் நிற்கும் ஒற்றுமை
நயம் கருதியவழி ஒன்றுபோல் தோன்றும் ஆயினும் உயிர் சித்தாயும் உடம்பு சடமாயும்
நிற்கும் வேற்றுமை நயமாகிய உண்மை கருதியவழி அவ்விரண்டும் தம்முள் வேறாம்;
ஆதலின் உயிரோடு கூடி நின்ற காலத்தும் அவ்வுடம்பினை உயிரல் பொருள் என்று
ஆம் எ-று. (10)
 

உயிர்க்குணம்
 

452.

அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்.

     எ-னின், உயிரின் குணம் (443) என்றார்; அவை இவை என உணர்த்துதல்
நுதலிற்று.

     இ-ள்: அறிவு முதலிய முப்பத்திரண்டும்442 இவை போல்வன பிறவும் உடலோடு
கூடிய உயிர்க்குணங்களாம் எ-று.

     உடலோடு கூடாவழி உயிர்க்குணங்கள் தோன்றா என்பார்,
‘உடல்கொளுயிர்க்குணம்’ என்றார். பின் வருவதும் அது. (11)
 

உயிரின் தொழிற்குணம்
 

453.

துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்
உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம்.

     எ-னின், உயிரின் தொழிற்குணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: ஐம்புலனையும் நுகர்தல்443 முதலிய இவ்வைந்தும் இவை போல்வன பிறவும்
-----------------------------
     442உயிர்க்குணங்கள் முப்பத்திரண்டிற்கும் மயிலைநாதர் (நன். 451)
உதாரணங்களைக் காட்டுவார்.
     443மயிலைநாதர் (நன். 452) உயிரின் தொழிற்குணங்களை விளக்கிக் கூறி உதாரணங்களும் தருவார்.