நன்னூல் விருத்தியுரை | உரியியலுக்குப் புறனடை | {460} | இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே. | எ-னின், இவ்வியலுக்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொல்லுள் இன்ன சொல் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடத்துள்ளும் வழக்குச், செய்யுள என்னும் இரண்டு இடத்துள்ளும் இவ்விடத்து இவ்விலக்கணத்ததாய் நடக்கும் என்று சொல்லக் கடவதாகிய இந்நூலுள் அவ்விலக்கணம் காட்டுதற்கு வேண்டிய மாத்திரையே கூறுவதன்றி, உரிச்சொல்லாகிய குணப்பெயரையும் ஏனைக் குணப்பெயரையும் நிகண்டினுள் கூறினாற்போல விரித்துக் கூறக் கடவம் அல்லம்; விரிக்கின் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் வரும் ஆதலின். அவற்றினைக் கண்டறிய வேண்டினார் இவ்விலக்கணம் அறிதற்கு முன்னரே பிங்கலர் முதலாகிய ஏனைப் புலவரால கூறப்பட்ட பிங்கலம், திவாகரம், சூடாமணி முதலிய நூல்களுள் வகுக்கும் உரிச்சொல் தொகுதியுள் விரும்பிக் கொள்க எ-று. இவ்விலக்கணம் அறிதற்கு முன்னரே நிகண்டு அறிக என்றாம் அறியும் முறை அது ஆதலான். இவ்வியலுள், “சால” (நூ. 456) என்பது முதல், “ஆர்ப்பு” (நூ. 459) என்பது ஈறாக நாற்பத்தைந்து உரிச்சொல் எடுத்துச் சுருங்கச் சொல்லுதல், சொல்லியல உணர்த்தும் நூலுள் சொல் தொகுதிகளை விரிக்கின் மற்றொன்று விரித்தலாம் என உணரார் குன்றக் கூறலாம் என்பார் ஆதலின் அது பரிகரித்தற்கு இச்சூத்திரத்தால் புறனடை கூறினார். இங்ஙனம் கூறவே பெயரியலுள் பெயர்த் தொகுதியினையும் வினையியலுள் வினைத் தொகுதியினையும் இடையியலுள் இடைத் தொகுதியினையும் விரியாது அவ்விலக்கணம் காட்டுதற்கு வேண்டிய மாத்திரையே கூறுதற்கும் இதுவே புறனடையாம் என்க. பெயரியல் என்பது பெயர் இலக்கணம். பெயர்த் தொகுதி என்பது பெயர்க் கூட்டம். ஏனையவும் அன்ன. கூட்டம் எனினும் நிகண்டு எனினும் ஒக்கும். இலக்கணம் கூறும் நூலுள் நிகண்டினையும் உடன் கூறாது அதனை வேறு ஓர் நூலாகக் கூறுதல் தமிழுள்ளே அன்றி ஆரியம் முதலியவற்றுள்ளும் காண்க. | |
|
|