பக்கம் எண் : 522
  

நன்னூல் விருத்தியுரை

சொல்லதிகாரப் புறனடை
 

461.

சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்து
முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவுந்
தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே.
 
     எ-னின், இவ்வதிகாரத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதுலிற்று.

     இ-ள்: சொற்றொறும் இத்தன்மைத்து இதன் இலக்கணம் என்று முற்ற மொழியப்
புகின் வரம்பு இலவாம். ஆதலின் எடுத்துக் கூறிய சொற்களின
இலக்கணங்களைக்கொண்டு சொல்லாதனவற்றின் இலக்கணங்களையும் ஒப்புமை கருதி,
இதுவும் அது என முற்ற விளங்க உணர்தல் நூல் ஓதித் தெளிதற்கு உரிய மாணாக்கர்
திறனாம் எ-று.

     இவற்றிற்கு உதாரணம் முன்னரே வந்துழி வந்துழிக்448 காட்டினாம்; ஆங்காங்கு
உணர்க. (20)
 

நூலுக்குப் புறனடை
 

462.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.
 
     எ-னின், இந்நூலிற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: முற்காலத்து உள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து இறத்தலும்
முற்காலத்து இல்லன சில பிற்காலத்து இலக்கணமாய் வருதலும் குற்றம் அல்லவாம்
காலவேற்றுமை அது ஆகலான் எ-று.

     இவற்றிற்கும் உதாரணம் முன்னர் வந்துழி வந்துழிக்449 காட்டினாம்; ஆங்காங்கு
உணர்க. (21)
 

உரியியல் முற்றிற்று.
 

சொல்லதிகாரம் முற்றுப்பெற்றது.
 

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் முற்றும்.

 
--------------------------------
     448காட்டிய இடங்கள்: நூ. 341, 354, 377, 378, 379, 390, 394, 414
முதலியன.
     449காட்டிய இடங்கள்: நூ. 7, 332, 337, 338, 339, 349, 350, 407, 420, 422 முதலியன. இறந்தது விலக்கல், எதிரது போற்றல் என்னும் உத்திகளால் தழுவப்படுவனவும் (124, 140) ஈண்டுக் காட்டத் தக்கன.