இலக்கணக் கலைச்சொற்கள் (எண்: நூற்பா எண்) | இப்பகுதியில் நன்னூல் மூலபாடத்தில் வரும் இலக்கணக் கலைச்சொற்கள் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. அடி அளவால் நன்னூல் நூற்பாக்கள் குறைந்தன என்பதால் நூற்பா எண்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன; அடி எண்கள் தரப்படவில்லை. இது நன்னூல் மூலபாடத்துக்குச் சொல்லடைவோ அருஞ்சொல் அகராதியோ அல்ல. எனவே அங்காப்பு, எழுத்து, சொல், பகுதி, விகுதி போன்ற தனிச்சொற்களும் ஆகுபெயர், உயர்திணை, தொழிற்பெயர், விரவுப்பெயர் போன்ற தொகைச்சொற்களும் ஒரு பொருட் பன்மொழி, பால் பகா அஃறிணைப்பெயர், வினையால் அணையும் பெயர் போன்ற பன்மொழித்தொடர்களும் செய்யென் ஏவல், செய்யென் வினை என்று வாய்பாடுகளை உணர்த்த வரும் தொடர்மொழிகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆயினும் அஃகு, இசை, உறழ், புணர், மயங்கு போன்ற வினையடிகள் இதன்கண் கொடுக்கப்படவில்லை. சாரியையும் (உ-ம்: விகாரத்து, 151) உருபும் (உ-ம்: அங்காப்போடு, 77) சாரியையோடு உருபும் (உ-ம்: இனத்தோடு, 142) பன்மை விகுதியும் (உ-ம்: மெய்கள்,126) ஏற்றுத் திரிந்த பெயர்கள் அத்திரிபுகளோடு இங்கு இடம் பெறவில்லை. திரிபும் விகாரமும் இல்லாத அங்காப்பு, இனம், மெய், விகாரம் என்னும் தனிப்பெயர்கள் மட்டுமே இவண் காணப்படும். உவமத்து உருபு, பெயரின் எச்சம் போன்ற தொகைமொழிகள் செய்யுட்கண் அருகி வருவன. அதனால் உவமவுருபு, பெயரெச்சம் என்று மாற்றாமல் மூலத்தில் உள்ளவாறே அவை கொடுக்கப்பட்டுள்ளன. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் என்னும் சார்பெழுத்துக்களை அஃகிய இ, அஃகிய உ, அஃகிய ஐ, அஃகிய ஒள, அஃகிய மஃகான் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பெயரெச்ச அடைமொழி கொடுத்துக் கூறாமல், “அஃகிய இஉ ஐஒள மஃகான்” (நூ. 60) என ஒரே அடியில் மணிச்சுருக்கமாகப் பவணந்தி முனிவர் கூறுவார். நூற்பா செய்யுள் என்பதாலும் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ப அவற்றைச் சுருக்கிச் சொல்வது மரபு என்பதாலும் ஆசிரியர் இந்த நுட்பமுறையை வேறு பல நூற்பாக்களிலும் (உ-ம்: 61, 62, 79, 81, 99, 106, 160, 178, 182) திறம்படக் கையாண்டுள்ளார். இத்தகைய இடங்களில் பொருள் விளக்கத்துக்காக விரிக்கப்படும் சொற்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. (அஃகிய) உ, (அஃகிய) ஐ, (அஃகிய) ஒள, (அஃகிய) மஃகான், இக்(குறுக்கம்), ஐக்(குறுக்கம்), (யா) வினா | |
|
|