பக்கம் எண் : 59
  

பதிப்புரை


அவரே. அவர் பதிப்பித்த ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களுள்88 இலக்கணங்கள் ஏழு.
அவற்றுள் தலைசிறந்தது89 நன்னூல் விருத்தியுரை. நாவலர் இதைப் பதிப்பித்த போது
அவருக்கு வயது இருபத்தொன்பது என்பது அறிய வேண்டிய செய்தி. “சனகாபுரம்
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் திருநெல்வேலி சங்கர
நமச்சிவாயப் புலவரால் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகிய
சிவஞான சுவாமிகளால் திருத்தப்பட்ட விருத்தியுரையும்”
என்பது இப்பதிப்பின்
தலைப்பு. நூலாசிரியர், நூல், உரையாசிரியர், திருத்தம் செய்த உரையாசிரியர் என்று
எல்லாப் பெயர்களும் முகப்பிலேயே அமைந்த முழுத் தலைப்பு. நீண்டது என்றாலும்
இதுவே90 முறையானது. புத்தம் புத்துரை என்னும் பெயர் முகப்புத் தாளில் இடம்
பெறாதது எண்ணத் தக்கது. 1851-இல் முதன் முதலாக வெளிவந்த இப்பதிப்பு ஒரு
நூற்றாண்டுக்கு மேலாகச் செல்வாக்கோடு திகழ்ந்தது.

     சுவடியில் உள்ளதை உள்ளவாறே பிழை இல்லாமல் மூலபாடமாக வழங்குவது,
தொடர்களின் அமைப்புக்கு ஏற்றவாறு நிறுத்தல் குறிகளை அறிந்து பயன்படுத்துவது,
பொருளியைபை உணர்ந்து பத்திகளை இயல்பாகப் பிரிப்பது என்பவை ஆறுமுக நாவலர்
பதிப்புகளின் தனிச்சிறப்புகள். பொதுவாக அவருடைய பதிப்புகளில் மூலம், உரை, சூத்திர
அகராதி, சோதன பத்திரம் (பிழை திருத்தம்) முதலியனவே காணப்படும்.
மேற்கோள்களின் இடவிளக்கங்கள், பாட வேறுபாடுகள், விளக்கக் குறிப்புகள்
முதலியவற்றை அவர் தருவதில்லை; முகவுரை, பதிப்புரை, பின்னிணைப்புகள் போன்ற
புறப்பகுதிகள் அவருடைய பதிப்புகளில் இருப்பதில்லை. நூற்பாக்கள் சீரும் அடியும்
பிரிக்கப்படாமல் உரைநடைபோல அமைந்திருக்கும். விருத்தியுரையில் அமைந்துள்ள
இம்முறையை நாவலரின் பிற இலக்கணப் பதிப்புகளிலும் காணலாம். நன்னூலின் சிறப்புப்
பாயிரப் பகுதியில் விமரிசம் என்பதற்கு விளக்கமும் (பக். 5) இளம்பூரணர் பற்றிய ஒரு
சிறுகுறிப்பும் (பக். 7) அடிக்குறிப்புகளாகக் கொடுத்துள்ளது விதிவிலக்கு. நாவலர் பதிப்பு
என்றால் பிழையற்ற பதிப்பு; நம்பகமான பதிப்பு என்ற நம்பிக்கை நிலவியது. அதனால்
கல்வித்துறை அவர் பதிப்புகளை மகிழ்ந்து வரவேற்றது. ஆனால் அவர் மறைவுக்குப்
------------------------
     88யாழ், சி. செல்லையா பி்ள்ளை, யாழ்ப்பாண நல்லூர் ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக
நாவலர் சரித்திரச் சுருக்கமும் அவர்கள் இயற்றி அருளிய தனிப்பாமாலையும், கொழும்பு, 1914. பக். 10.
     89இரத்தினச் சுருக்கம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி,
உவமான சங்கிரகம், தொல்காப்பியச் சூத்திர விருத்தி, பிரயோக விவேகம்
என்பன அவர் பதிப்பித்த மற்ற இலக்கண நூல்கள். அன்றியும் 1868-ல் சி. வை.
தாமோதரம் பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப்
பரிசோதித்து உதவியவரும் நாவலரே.
     90பிந்திய பதிப்புகளில் இத்தலைப்பு வேறு வகையாகக் காணப்படுகிறது.