பக்கம் எண் : 6
  

பதிப்புரை
 

  “எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்.
(குறள். 392 பரிமேலழகர்)

இலக்கண மரபு- புத்திலக்கணத் தோற்றம்- பவணந்தி முனிவர்-
நன்னூல்- உரைகள்- பதிப்புகள்- புதிய விருத்தியுரைப் பதிப்பு-
நன்றி- நிறைவுரை
 

இலக்கண மரபு

     உலகமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இலக்கண அமைப்பு உண்டு. இலக்கிய
வளம் பெற்றுள்ள மொழிகளுக்கே அன்றி வரிவடிவம் அரிசுவடியும் பெறாமல்
பேச்சுவழக்கில் மட்டுமே வழங்கிவரும் மொழிகளுக்கும் காலப்போக்கில் பேச்சு வழக்கை
இழந்து ஏடுகளிலும் கல்வெட்டுகளிலும் நிலைத்துவிட்ட மொழிகளுக்கும் இது பொருந்தும்.
சுருங்கச் சொன்னால் உலகில் வழங்கும் எந்த ஒரு மொழிக்கும் அதற்கே உரிய
இலக்கண அமைப்பு உண்டு. இது மொழியியல் உண்மை. ஆனால் அந்த இலக்கண
அமைப்பை முறையாக வரையறுத்துக் கூறும் இலக்கணம் அதாவது இலக்கண நூல்
எல்லா மொழிகளுக்கும் இல்லை. எனவே இலக்கண நூல் இல்லாத, எழுதப்படாத
எண்ணற்ற மொழிகள் நிலப்பரப்பின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்படுகின்றன; கருத்துப்
பரிமாற்றத்துக்குக் காலம் காலமாகப் பயன்பட்டுவருகின்றன. நூற்றுக் கணக்கான
மொழிகளுக்கு வரிவடிவும் பால பாடமும் இந்த நூற்றாண்டில் தான் முதன் முதலாக
உருவாயின; இலக்கண நூல்களும் எழுதப்பட்டன. வரிவடிவு பெறாமல், இலக்கணம்
காணாமல் ஒலிவடிவிலேயே வாழும் மொழிகள் இன்னும் ஏராளம் உண்டு. இந்த
மொழியியல் உண்மைகளை எல்லாம் தமிழ்மொழியின் வரலாற்றோடு ஒப்பிட்டு
நோக்கினால்தான் தமிழிலக்கண மரபின் தொன்மையும் பெருமையும் புலப்படும்; அதன்
செழிப்பும் சிறப்பும் விளங்கும்.

    மொழி உணர்வும் இலக்கணச் சிந்தனையும் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே
தோன்றிவிட்டதாக மொழியியலார் கருதுகின்றனர். இந்த நெடிய வரலாற்றில் இந்திய
இலக்கணிகளின் பங்களிப்பு தொடக்கம் முதலே இருந்துள்ளது. அதனால்தான்