பக்கம் எண் : 60
  

பதிப்புரை


பிறகு வெளிவந்த நாவலர் பதிப்புகளில் பிழைகள் கலந்துவிட்டன என்று பலரும்
சொல்வது உண்மை; வெறும் குற்றச்சாட்டு அல்ல.
 

கழகப் பதிப்பு

 
     நாவலர் பதிப்புக்குப் பின்னர் நன்னூல் விருத்தியுரைக்கு 1956-இல் கழகம் ஒரு
பதிப்பை வெளியிட்டது. புலவர் வகுப்புக்கு நன்னூல் விருத்தி பாடமாக இருந்ததால்
ஊதிய நோக்கோடு ஒழுங்கு செய்யப்பட்டது இப்பதிப்பு. இதற்கு அடிப்படை நன்னூல்
விருத்தியுரையின் ஏடுகள் அல்ல; ஆறுமுக நாவலர், தெய்வசிகாமணி
முதலியார்-சண்முகம் பிள்ளை, சாமிநாதையர் ஆகியோர் வெளியிட்ட பதிப்புகளே.
தங்கள் பதிப்புரையில் புலவர் குழுவினர் இதைக் குறிப்பிடவில்லை என்றாலும் இதுவே
உண்மை.

     சங்கர நமச்சிவாயர் உரையிலிருந்து சிவஞான முனிவர் உரையைத் தனியாகத்
தலைப்புக் கொடுத்து வேறுபடுத்திக் காட்டியது, நூற்பாக்களைச் சந்தி பிரித்து அமைத்தது,
நூற்பாக்களுக்குத் தலைப்புக் கொடுத்தது, மேற்கோள்களுக்கு இடவிளக்கம் தந்தது,
ஆசிரியர், உரையாசிரியர் வரலாறுகளை எழுதியது, மேற்கோள் நூல்களின் விளக்கம்,
அருஞ்சொற் பொருள், அருந்தொடர்கள் ஆகியவற்றுக்கு அகரவரிசைகளைத்
தொகுத்தது, தேர்வுக்குரிய வினாக்களைத் தொகுத்தது முதலியவற்றை இப்பதிப்பின்
சிறப்பியல்புகளாகப் பதிப்புரை குறிப்பிடுகிறது. உண்மையில் இதற்காகப் புலவர் குழு
செய்தது ஒன்றே ஒன்றுதான்; மற்றவை எல்லாம் பழைய பதிப்புகளிலிருந்து அப்படியே
அள்ளி அச்சுக் கோத்துக்கொண்டவை. காட்டாக நூற்பாத் தலைப்புகளை ஆறுமுக
நாவலர் காண்டிகையிலிருந்தும்91 ஆசிரியர்களின் வரலாறுகள், அகரவரிசைகள்,
மேற்கோள்களின் இடவிளக்கக் குறிப்புகள் முதலிய பகுதிகளைச் சாமிநாதையர்
பதிப்பிலிருந்தும் அடிக்குறிப்புகளைத் தெய்வசிகாமணி முதலியார் (1889), சாமிநாதையர்
பதிப்புகளிலிருந்தும் புலவர் குழுவினர் வாரிக்கொண்டனர். அவற்றில் நேர்ந்துள்ள
பிழைகள் மட்டுமே புலவர் குழுவின் பங்களிப்பு. எனினும் அந்தப் பதிப்புகளையும்
அவற்றின் பதிப்பாசிரியர்களையும் பற்றிப் பதிப்புரையிலோ அணிந்துரையிலோ எந்தத்
தகவலும் இல்லை. அவர்களுக்கே கைவந்த இப்பதிப்பு முறை ஒரு வகை இலக்கியக்
கொள்ளை என்று தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் மு. அருணாசலம் கூறுவது92
முற்றிலும் பொருந்தும்.
------------------------
     91நன்னூல் மூலத்தை 1930-இல் வெளியிட்ட போதே இத்தலைப்புகளை
நாவலர் காண்டிகையிலிருந்து கழகம் எடுத்துக்கொண்டது.
     92தமிழ் இலக்கிய வரலாறு பதினொராம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம்,
1971. பக். 401.