| பதிப்புரை | இனி இப்பதிப்பில் கழகப் புலவர்கள் செய்த, இன்னும் சரியாகச் சொன்னால் செய்ய நினைத்த ஒரே ஒரு நல்ல அம்சத்தையும் பார்க்கலாம். அதற்கான குறிப்பை அவர்களுக்கு வழங்கியவர் சாமிநாதையர். சுப்பிரமணிய தேசிகரிடம் தாம் நன்னூல் கற்ற வரலாற்றைக் கூறும் பகுதியில், விருத்தியுரை அச்சுப் புத்தகத்தில் சங்கர நமச்சிவாயர் உரையையும் சிவஞான முனிவர் உரையையும் முறையே, ‘ச’ என்றும், ‘சி’ என்றும் அடையாளம் செய்து படித்த முறையைச் சாமிநாதையர் (1925. முகவுரை பக். 3) விவரித்திருந்தார். அதுவும் அல்லாமல் சென்ற நூற்றாண்டில் வெளிவந்த விருத்தியுரைப் பதிப்புகள் எதுவும் இந்த உரை வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டவில்லை. சங்கர நமச்சிவாயர் உரைக்கு இரண்டாவது பதிப்பை (1935) வெளியிட்ட சாமிநாதையர் அவருடைய உரையில் சிவஞான முனிவர் திருத்திய பல இடங்களை93 அடிக்குறிப்புகளில் காட்டியிருந்தார். இவற்றை எல்லாம் கவனித்த கழகப் புலவர்கள் அவ்விரு உரைகளையும் வேறுபடுத்திக் காட்டும் பாடநூல் பதிப்பு ஒன்றை வெளியிட எண்ணினார்கள். எண்ணுவது எளிது; எண்ணியாங்கு இயற்றுவது அரிது என்பதற்கு இப்பதிப்பே இலக்கியம். சிவஞான முனிவர் செய்திருந்த திருத்தங்களில் மூன்றில் ஒரு பகுதியைக் கூடக் கழகப் பதிப்பு வேறுபடுத்திக் காட்டவில்லை; காட்டாதது மட்டும் அல்ல. சிவஞான முனிவர் விளக்கம் என்று தலைப்பிட்டு வேறுபடுத்திய இடங்களில் நேர்ந்துவிட்ட குழப்பங்களுக்கும் குறைவு94 இல்லை. உதாரணத்துக்காக ஒன்றிரண்டு. தெரிநிலை வினைப்பகுதி பற்றிய நூற்பாவுக்குச் சங்கர நமச்சிவாயர் வரைந்த உரையைச் சிவஞான முனிவர் குறைத்தும் கூட்டியும் மாற்றியும் திருத்தியுள்ளார். ஆனால் பவணந்தி முனிவரையும் அவர் இயற்றிய இந்நூற்பாவையும் வியந்து பாராட்டிக், “கையறியா மாக்கட்கு அன்றி, நூல் இயற்றும் அறிவினை உடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான் உலகமலையாமை உள்ளிட்ட பத்து அழகோடும் பிறந்து நின்றது இச்சூத்திரம் என்று உணர்க.” (நன். 137) என்று சங்கர நமச்சிவாயர் எழுதிய உரை வாசகத்தை முனிவர் திருத்தவில்லை. இதுபோலவே திணைகளைப் பற்றிய நூற்பாவின் உரையில், “மக்களாகப் பிறந்து, புண்ணிய பாவம் இயற்றிப், புண்ணிய மிகுதியால் தேவராயும் பாவ மிகுதியால் நரகராயும் பிறத்தலின், ‘மக்க டேவர் நரகர்’ எனச் சாதன சாத்திய முறையே வைத்தார் என்க.” (நன். 261) என்று சங்கர நமச்சிவாயர் ----------------------------- 93சாமிநாதையர் காட்டிய இடங்கள்: சிற. பாயி., நூ. 73, 94, 125, 137, 142, 182, 184, 194, 285, 293, 295, 296, 298, 299, 300, 317, 319, 321, 335, 420, 442, 449. 94சிவஞான முனிவர் திருத்தியவற்றில் ஐம்பதுக்கும் குறைவான இடங்களையே கழகப் பதிப்பு வேறுபடுத்திக் காட்டிற்று. அவற்றுள் செம்பாதி பிழை. | |
|
|