| பதிப்புரை | தருக்கவியல் நயம் தோன்றச் சிறப்புரை எழுதுவார். இப்பகுதியையும் சிவஞான முனிவர் திருத்தவில்லை. இப்பகுதிகளை எல்லாம் முனிவருடைய திருத்தங்களாகக் கொண்டு, சிவஞான முனிவர் விளக்கம் என்று தலைப்புக் கொடுத்துக் கழகப் புலவர் குழுவினர் அச்சிட்டுவிட்டனர். இவ்வாறு அவர்கள் பிறழ உணர்ந்த இடங்கள் வேறு சிலவும்95 உண்டு. இத்தகைய குழப்பங்கள் நல்ல ஆய்வாளர்களையும் இடறி விழச் செய்துவிடும். இந்தப் பதிப்பை நம்பி, அப்பகுதிகளைச் சிவஞான முனிவர் எழுதியனவாகக் கருதிச் சிலர்96 ஆராய்வது இதற்கு நல்ல உதாரணங்கள். ஒரு வரியில் சொன்னால் கழகத்தின் நன்னூல் விருத்தியுரை ஒரு மலினப் பதிப்பு. | | தண்டபாணி தேசிகர் பதிப்பு | நாவலர் பதிப்பு வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சிவஞான முனிவரின் குருபூசை விழாவை ஒட்டி 1957-இல் திருவாவடுதுறை ஆதீனம் விருத்தியுரைக்கு ஒரு பதிப்பை வெளியிட்டது. அதன் பதிப்பாசிரியர் தண்டபாணி தேசிகர். அவர் திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக் களஞ்சியம் போன்ற நல்ல நூல்களைத் தமிழியலுக்கு வழங்கிய முதுபெரும் புலவர். அவர் எழுதியும் பதிப்பித்தும் வெளிவந்த நூல்கள் நூற்றுக்கு மேற்பட்டன. அவர் சாமிநாதையரின் மாணவர். அவரைப் போல இளமையில், பதின்மூன்று வயது முதலே நன்னூலைப் படிக்கத் தொடங்கியவர்; யாழ்ப்பாணம் வேற்பிள்ளை போன்ற ஆசிரியர்களிடம் நன்னூலைப் பயின்றவர்; புலவர் வகுப்பு மாணவர்களுக்குப் பல ஆண்டுகள் நன்னூலைப் பாடம் சொன்னவர் அதோடு சாமிநாதையரிடம் ஆராய்ச்சி நெறிமுறைகளை97 நேரில் கற்றவர். எனவே, “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து” (குறள். 517) ஆதீனத் தலைவர் நன்னூல் பதிப்புப் பணியைத் தண்டபாணி தேசிகரிடம் ஒப்படைத்ததில் வியப்பு எதுவும் இல்லை. இந்தக் குறிப்புகளோடு இனி இப்பதிப்பின் குணக் குற்றங்களைப் பார்க்கலாம். குணம் மிகுதி; குற்றம் குறைவு என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிட வேண்டும். இது ஏடுகளை ஆராய்ந்து, அச்சுப் பிரதிகளோடு ஒப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு. ஆதீனத் தலைவர், “ஆதீனத்துச் சரஸ்வதிமால் என்னும் கலைமகள் நிலயத்துள்ள சங்கர நமச்சிவாயர் உரையில் ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருத்திய ---------------------------- 95அவர்கள் பிறழ உணர்ந்த பிற இடங்கள்: சிற. பாயி., நூ. 91, 94, 194, 285, 295, 319, 321, 420. 96இரா. இளங்குமரன், 1988. பக். 300-301; அ. மு. பரமசிவானந்தம், தமிழ் உரைநடை, சென்னை, 1976. பக். 170. 97திருவாசகம், திருவாவடுதுறை, 1964. முகவுரை பக். 23. | |
|
|