| பதிப்புரை | ஏட்டை எடுப்பித்துத் தந்து ஒப்புநோக்கித் திருத்தி ஆதீனப் பதிப்பாகவே வெளியிடுக என அடியேற்கு ஆணை வழங்கினார்கள்.” என்று முகவுரையில் (1957. பக். 9) தேசிகரே குறிப்பிட்டுள்ளார். இப்பதிப்பின் சிறப்பியல்புகளுள் சிறந்தவை மூன்று. நன்னூல் விருத்தியுரையில் சங்கர நமச்சிவாயர் உரையையும் சிவஞான முனிவர் திருத்தங்களையும் எளிதில் அறியுமாறு திருத்தப் பகுதிகளின் முன்னும் பின்னும் உடுக்குறியிட்டு வேறுபடுத்திய பதிப்பு முறை முதலாவது. முனிவரின் திருத்தங்களோடு கூடிய விருத்தியுரை ஏட்டைச் சங்கர நமச்சிவாயர் உரை மட்டும் உள்ள ஏட்டுடனும் அச்சுப் படிகளுடனும் ஒப்பிடுவது அரிய பணி. அதன் அருமையை எண்ணி அயராமல் ஏறக்குறைய நூறு நூற்பாக்களில் சிவஞான முனிவர் திருத்தங்களை எடுத்துக்காட்டியது அவரது அயரா உழைப்பு; “அடக்கிப்” (நன். 262), “முதலிய” (நன். 393), “அவற்றை” (நன். 399) முதலான சொல்லளவுத் திருத்தங்களையும் புறக்கணித்து ஒதுக்காமல், நுணுகி நோக்கிக் குறியிட்டது அவரது நுண்ணுணர்வு; அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்ட முடியாத பகுதிகளில், “இச்சூத்திர உரையில் சவாமிகளின் திருத்தம் இடைக்கிடை கலந்துள்ளது; சங்கர நமச்சிவாயர் உரைப்பிரதி நோக்கி அறிக.” (நூ. 194) என்று அடிக்குறிப்பு வரைவது அவரது புலமை நேர்மை. இவை எல்லாம் ஒரு நல்ல பதிப்பாசிரியரின் அடிப்படைத் தகுதிகள். இவை தேசிகரிடம் ஒருங்கே அமைந்திருந்ததால் தமிழியல் வளம் பெற்றது. பெயரியலிலும் வினையியலிலும் சிவஞான முனிவர் சேர்த்து எழுதியவற்றில் பெரும்பகுதி இலக்கணக் கொத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது. பொருத்தமற்ற காரணங்களைக் கூறாமல், இந்த உண்மையை அவர் நேரடியாகச் சுட்டிக்காட்டியது இப்பதிப்பின் இரண்டாவது சிறப்பு. காட்டாக நான்காம் வேற்றுமையைக் கூறும் நூற்பாவின் உரையில் உள்ள திருத்தத்துக்கு, “இவ்வேற்றுக்கோடற் பொருள் என்பது முதல் பாவனை எனவும் வரும் என்ற பகுதி வரை உள்ளன இலக்கணக் கொத்து 36-ஆம் சூத்திரமும் அதன் உரையும் ஆகும்.” (நூ. 298) என்ற அடிக்குறிப்பைத் தேசிகர் கொடுத்துள்ளார். அந்த விளக்கம் உண்மையில் யாருடையது என்று இந்தக் குறிப்பின் மூலம் அவர் இனம் காட்டியுள்ளார். தெய்வசிகாமணி முதலியார் (1889. பக். 277), சாமிநாதையர் (1935. பக். 252) ஆகியோர் இந்நூற்பாவுக்குக் கொடுத்துள்ள அடிக்குறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தேசிகர் அடிக்குறிப்பின் பயன் நன்றாக விளங்கும். | |
|
|