பக்கம் எண் : 64
  

பதிப்புரை


     நானூறுக்கு மேற்பட்ட நூற்பாக்களுக்கு நல்ல உரைவிளக்கக் குறிப்புகளைத் தேசிகர்
வரைந்திருப்பது இப்பதிப்பின் மூன்றாவது சிறப்பு. உதாரணமாகச் சிறப்புப் பாயிரம்
இயற்றுவோரைக் கூறும் நூற்பாவுக்குத், “தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரையில்
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரைகாரனைச் சிறப்புப் பாயிரம் செய்தற்கு
உரியவனாகக் குறிக்கவில்லை.”
(நூ. 51) என்று அவர் துருவித் தேடிக் கொடுத்துள்ள
அடிக்குறிப்பைக் காட்டலாம். இலக்கண உரைகளில் அவருக்கு இருந்த பயிற்சியை இது
புலப்படுத்துகிறது. இவற்றைத் தவிர இப்பதிப்பில் காணப்படும் பத்திப் பிரிப்பு, சந்திக்
குறியீடுகள், பாடபேதக் குறிப்புகள் முதலியனவும் சுட்டத் தக்கன.

     இந்த நல்ல பதிப்பிலும் குறை இல்லாமல் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டைப்
பார்க்கலாம். முதலாவது நூலின் தலைப்பைப் பற்றியது. “ஸ்ரீ மாதவச் சிவஞான
சுவாமிகள் இயற்றிய புத்தம் புத்துரை என்னும் நன்னூல் விருத்தியுரை”
என்பது
நூலின் தலைப்பு. இது குறையுடையது; திரிபுடையது. பவணந்தி முனிவரின் நன்னூல்
மூலம், சங்கர நமச்சிவாயரின் உரை, சிவஞான முனிவரின் திருத்தம் ஆகிய மூன்றும்
புத்தம் புத்துரையின் உட்பகுதிகள். இவற்றுள் முதல் இரண்டுமே முக்கியமானவை என்பது
சொல்லாமல் விளங்கும். சங்கர நமச்சிவாயர் உரையோடு ஒப்பிடும் போது முனிவர்
திருத்திச் சேர்த்த பகுதி அளவில் மிக மிகக் குறைந்தது. இந்தத் திருத்தக் குறிப்புகள்
இல்லாமல் நன்னூல் மூலமும் உரையும் தனித்து வழங்கக் கூடியன; வழங்கிவருவன.
ஆனால் சிவஞான முனிவர் திருத்தி எழுதிய பகுதிக்கு அந்தத் தகுதி இல்லை. அதாவது
பவணந்தி முனிவரின் மூலமும் சங்கர நமச்சிவாயரின் உரையும் இல்லாமல் சிவஞான
முனிவரின் திருத்தங்கள் மட்டும் தனித்து வழங்க முடியாது; அவற்றைத் தனியே
அச்சிட்டு வெளியிடவும் முடியாது. அப்படியே வெளியிட்டாலும் அதற்கு முதலும்
இருக்காது; முடிவும் இருக்காது; இலக்கண விளக்கச் சூறாவளியைப் போல இதுவும்
வழக்கற்றுப் போய்விடும். வேறு வார்த்தைகளில் சொன்னால் மூலம் இன்றேல் உரை
இல்லை; உரை இன்றேல் திருத்தம் முற்றிலும் இல்லை. உருவும் ஒளியும் இன்றேல் நிழல
ஏது? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து விருத்தியுரைக்கு அவர் முறையான
தலைப்பை முழுமையாகக் கொடுத்திருக்க வேண்டும்; விருத்தியுரை முழுவதுமே சிவஞான
முனிவரால் இயற்றப்பட்டது என்னும் தப்பெண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடிய இந்தத்
தலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். தலைப்பில் சிவஞான முனிவருக்குச் சிறப்பிடம்
தந்து பவணந்தி முனிவர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் பெயர்களைப் புறக்கணித்தது
நல்ல முன்மாதிரி அல்ல.