| பதிப்புரை | நன்னூல் என்றால் பவணந்தி முனிவரை உணர்த்தும்; அதுபோல விருத்தியுரை என்றால் சங்கர நமச்சிவாயர் உரையை உணர்த்தும் என்று இதற்கு யாரேனும் அமைதி கூறக் கூடும். நூலின் தலைப்புக்கு எதற்கு அமைதியும் விளக்கமும்? ஆறுமுக நாவலர், தெய்வசிகாமணி முதலியார் போன்றோர் கொடுத்துள்ள தலைப்பு நீண்டது என்றாலும் தெளிவானது அல்லவா? அதுபோல நூலின் முகப்பில் அதன் முழுத் தலைப்பையும் கொடுப்பதே நேரிய முறை. அன்றியும், “தண்டபாணி தேசிகர் எழுதிய குறிப்புரை ஆராய்ச்சி முதலியவற்றுடன்” என்பது முகப்புத் தாளில் இடம் பெற்றிருக்கவும் சங்கர நமச்சிவாயர் பெயரை முகப்புத் தாளில் அச்சிடாதது நடுநிலை ஆகாது. இவை எல்லாம் தண்டபாணி தேசிகர் அறியாதவை அல்ல. அறிந்திருந்தும் தலைப்பை இவ்வாறு அமைத்ததற்குப் புறத்தலையீடு ஒருவேளை காரணமாக இருந்திருக்கக் கூடும். எப்படி இருந்தாலும் இந்தக் குறைத் தலைப்பு தவறானது; நூலின் உள்ளடக்கத்துக்கு ஒவ்வாதது. சங்கர நமச்சிவாயரின் உரைப் பகுதிகள் பல இடங்களில் விடுபட்டுள்ளன. இது இந்தப் பதிப்பின் இரண்டாவது குறைபாடு. பத்துக்கு98 மேற்பட்ட இடங்களில் நேர்ந்துள்ள இத்தகைய விடுபாடுகளில் பல இரண்டாவது பதிப்பிலும் திருத்தப்படவில்லை. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, “லளவிறு தொழிற்பெயர்” (நன். 230) என்ற சூத்திரத்தின் உரை. இதன் பொழிப்புரையில், “ளகாரத்தை இறுதியாக உடைய முதனிலை திரிந்த தொழிற்பெயரும்” என்னும் உரைப் பகுதி விடுபட்டுள்ளது. இரண்டாவது பதிப்பிலும் (1971) இது திருத்தப்படாததால் இப்பதிப்பைப் பார்த்து நகல் செய்யப்பட்ட பதிப்பிலும் இவ்விடுபாடு இரண்டு இடங்களில்99 உரிமையோடு இடம் பிடித்துக்கொண்டது. இது போன்ற உரை விடுபாடுகள் ஆறுமுக நாவலர் (1933. நூ. 183, 346, 425, 456), சாமிநாதையர் (1935. நூ. 406, 407) பதிப்புகளிலும் அருகிக் காணப்படுகின்றன. மேற்கோள்களின் இடவிளக்கம் பற்றியது மூன்றாவது குறைபாடு. “சில விகாரமாமுயர்திணை” என்னும் சூத்திரத் தொடரைச் சங்கர நமச்சிவாயர் 229-ஆம் நூற்பாவில் எடுத்தாளுகிறார். இது நன்னூலின் 159-வது சூத்திரம் என்று சாமிநாதையர் (1925. பக். 302) முதன் முதல் இதற்கு இடவிளக்கக் குறிப்பு எழுதி உதவினார். அவருடைய இரண்டாவது பதிப்பில் (1935. பக். 170) இந்த நூற்பாவின் எண் 139 என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அது முதல் ஐந்தாவது பதிப்பு வரை (1991) சங்கர ----------------------- 98உரைப் பகுதிகள் விடுபட்டுள்ள இடங்கள்; நூ. 183, 230, 243, 261, 364, 365, 369, 371, 380, 386, 425. 99சோம. இளவரசு, 1981. பக். 37, 202; 1990. பக். 37, 224. | |
|
|