பக்கம் எண் : 67
  

பதிப்புரை


நூல்களிலும் இந்த அடிகளுக்கு அவர் கொடுத்துள்ள மேற்கோள் விளக்கக் குறிப்புகள்
முழுமை பெறாததோடு பிழையுடையனவாகவும் அமைந்துவிட்டன. சாமிநாதையரிடம்
நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டிருந்த தண்டபாணி தேசிகர் இந்த உண்மையை
அறிந்திருக்கவில்லை. அதனால் அவருடைய பதிப்பில் அமைந்துள்ளவாறே101 இந்த
மேற்கோள் பாடலை,
 
  “இளையன் மெல்லியண் மடந்தை”
“அரிய சேய பெருங்கான் யாறே”

என்று தம்முடைய பதிப்புகளில் (1957. பக். 368; 1971. பக். 494) தேசிகர் எடுத்து
அமைத்துக்கொண்டார். விருத்தியுரையைப் பதிப்பித்த பிற பதிப்பா சிரியர்களும்102 இந்த
நகல்முறையையே கடைப்பிடித்துள்ளனர்.

     இவ்வாறு ஆறுமுக நாவலரின் விருத்தியுரைப் பதிப்பு (1851) தொடங்கிச் சங்கர
நமச்சிவாயர் உரையின் ஐந்தாவது பதிப்பு (1991) வரையில் இந்தப் பிழை சாகா வரம்
பெற்றுவிட்டது. ஆறுமுக நாவலர், சாமிநாதையர் போன்ற பதிப்புச் செம்மல்களை
மதித்துப் பின்பற்றுவது வேறு; அவர்களுடைய பதி்ப்புகளைக் கண் மூடிப் பிரதி
செய்துகொள்வது வேறு. பதிப்புக் கலை வளரப் பின்னது அணுவளவும் பயன்படாது
என்பது மறுக்க முடியாத உண்மை.

     இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான
முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் நன்னூல் விருத்தியுரைக்கு
இதுகாறும் வெளிவந்துள்ள ஐந்து பதிப்புகளில் தண்டபாணி தேசிகர் பதிப்பே சிறந்தது.
உணர வல்லார்க்கு இப்பதிப்பின் சிறப்பு உணர்த்தாமலே விளங்கும்; உணரமாட்டார்க்கு
உணர்த்தினாலும் அது விளங்காது.
 

சுந்தரேசம் பிள்ளை பதிப்பு
 

     திருவாவடுதுறை ஆதீனப் பதிப்புக்குப் பின்னர்த் திருப்பனந்தாள் செந்தமிழ்க்
கல்லூரிப் பேராசிரியர் சுந்தரேசம் பிள்ளை நன்னூல் விருத்தியுரைக்கு 1969-இல் ஒரு
பதிப்பை வெளியிட்டுள்ளார். இது விற்பனை நோக்கில் வெளியிடப்பட்ட பதிப்பு
---------------------------------
     101ஆறுமுக நாவலர் பதிப்புகளிலும் (1851. பக். 239; 1933. பக். 255) இந்த
உதாரணம் இவ்வாறுதான் காணப்படுகிறது.
     102நன்னூல் விருத்தியுரை, கழகப் புலவர் குழுவினர், 1956. பக். 320; எம்.
சுந்தரேசம்பிள்ளை, சொல்லதிகாரம், 1969. பக். 103; சோம. இளவரசு, 1981. பக்.
445.