பக்கம் எண் : 68
  

பதிப்புரை


என்பதை, “இந்நூல் தமிழகப் பல்கலைக்கழகங்களில் புலவர் வகுப்பிற்குப்
பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆதலின் தமிழறிஞர்களும் மாணாக்கர்களும்
இந்நூலினைப் பெற்று எனது பணியை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.”
(பதிப்புரை
பக். 4) என்னும் வேண்டுகோள் அறிவிக்கிறது. “இப்புதுப் பதிப்புக்கு இன்று வரை
அச்சான நூல்கள் அனைத்தும் பேருதவி புரிந்தன.”
என்று பதிப்புரை (பக். 3)
கூறுவதால் இதுவும் கழகப் பதிப்பைப் போன்று பதிப்புகளைப் பார்த்துத்
தயாரிக்கப்பட்டது. பதிப்புப் பிழைகளில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகைக்கும்
நல்ல உதாரணங்கள் இப்பதிப்பில் உண்டு. அந்த வகையில் இதையும், ‘ஒரு முன்மாதிரிப்
பதிப்பு’ என்றே சொல்ல வேண்டும். நன்னூல் பதிப்பு விவரங்களைத்
தொகுத்துள்ளவர்களில் யாரும் இப்பதிப்பைப் பார்த்ததாகத் தெரியவில்லை. அதனால்
தமிழியல் வட்டத்தில் இது மிகுதியாகப் பரவவில்லை என்று தோன்றுகிறது. அதுவும் ஒரு
நன்மைக்கே.
 

இளவரசு பதிப்பு
 

     நல்ல தமிழ் நூல்களை வழங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1981-இல்
நன்னூல் விருத்தியுரைக்கு ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளது. தமிழியலுக்கு இலக்கண
வரலாற்றை எழுதி உதவிய சோம. இளவரசு இதன் பதிப்பாசிரியர். தேர்விக்கு உதவும்
நோக்கத்தோடு ஒவ்வொரு இயலிலும் உள்ள நூற்பாக்களின் கருத்துகளை அதிகாரத்
துவக்கத்தில் (1981. பக். 1-40; 277-323; 1990. பக். 1-42; 311-366), உரைநூல் பாணியில்
பதிப்பாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். இப்பதிப்பில் இப்பகுதி மட்டுமே அவருடைய
பங்களிப்பு. நன்னூல் உரைகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் (1981. பக்.  vi-xi 1990.   பக்.  vii-xii),    ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் (1981. பக். 225-276;
543-572; 1990. பக். 250-310; 617-651) உள்ள விளக்கக் குறிப்புகள் முதலிய மற்ற
பகுதிகளில் பெரும்பாலானவை உ. வே. சாமிநாதையரின் சங்கர நமச்சிவாயர் உரை,
தண்டபாணி தேசிகரின் நன்னூல் விருத்தியுரை, க. ப. அறவாணனின் எழுநூறு
ஆண்டுகளில் நன்னூல் போன்ற நூல்களிலிருந்து கொண்டவை. கைப்புண்ணுக்குக்
கண்ணாடி தேவை இல்லாததுபோல் இவற்றை மெய்ப்பிக்கவும் சான்று தேவை இல்லை.

     சுவடியைத் தொடாமலும் பதிப்புகளை ஒப்பிடாமலும் உருவான இந்த நகல்
பதிப்புக்குத் தண்டபாணி தேசிகர் விருத்தியுரையின் இரண்டாவது பதிப்பு (1971) அசல்.
மூலம், உரை, மேற்கோள் முதலியவை அதிலிருந்து அப்படியே எடுத்து அச்சுக்
கோக்கப்பட்டுள்ளன. அப்படியே என்பதில் அதன் பிழைகளும் அடங்கும். இதற்கு
ஒருசில உதாரணங்களைக் காட்டுவது முறை. பதவியலின் இறுதி நூற்பாவில்,