| பதிப்புரை | “உயிர்மெய் உயிரளபு” (நன். 150) என்பதும் புள்ளும் வள்ளும் என்னும் நூற்பாவில், “தொழிற்பெயர் மானும்” (நன். 234) என்பதும் தண்டபாணி தேசிகரின் இரண்டாவது பதிப்பில் (1971. பக். 189, 284) காணப்படும் பிழைப் பாடங்கள். சோம. இளவரசு இவற்றையே தமது விருத்தியுரைப் பதிப்பிலும் (1981. பக். 142, 205) பிழைகளோடு அச்சிட்டுக்கொண்டார். தேசிகரின் நன்னூல் பதிப்புகள் இரண்டையும் ஒப்பிடுவோர்க்கு, “உயிர்மெய்யும் உயிரளபு”, “தொழிற்பெயரும் மானும்” என்று உம்மை சேர்த்து ஆறுமுக நாவலரும் (1851) சாமிநாதையரும் (1935) அந்த நூற்பாக்களுக்குக் கொண்ட உண்மை பாடங்களையே தமது முதல் பதிப்பில் (1957. பக். 133, 206) தண்பாணி தேசிகரும் கொண்டுள்ளார் என்ற உண்மை புலப்படாமல் இருக்காது. இவை மட்டும் அல்ல. எந்த ஒரு பதிப்பிலும் இல்லாத புதுப் பாடங்களும் சோம. இளவரசு பதிப்பில் காணப்படுகின்றன. காட்டாக மொழியின் முதல் ஈறு இடைநிலைகளுக்குப் புறனடை கூறும் நூற்பாவில், “இயலும் என்ப” (நன். 121) என்பதே தேசிகர் பதிப்புகள் உள்ளிட்ட பழம்பதிப்புகள் அனைத்திலும் உள்ள பாடம். அதன் உரையில் அமைந்துள்ள, “என்று சொல்லுவர் புலவர்” என்ற உரைத் தொடருக்கு, “என்ப” என்பதே பாடம். பாடபேதம் நிகழாத நன்னூல் நூற்பாக்களுள் இதுவும் ஒன்று என்பதால் இளவரசு பதிப்பில் உள்ள, “இயலும் என்க” என்பது நிச்சயம் பிழைப் பாடம். அடுத்து, பெண்பாற்பெயரைக் கூறும் நூற்பாவின் உரையில், “ளகர ஒற்றிற்கும் இகர உயிர்க்கும்” என்று இருக்க வேண்டிய உரைத்தொடர் தண்டபாணி தேசிகர் பதிப்பில், “ளகர ஒற்றிற்கும் இகர ஒற்றிற்கும்” (நன். 277) என்று பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இதுபோலவே, “வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்” என்னும் குறுந்தொகைப் பாடலின் தொடர் தேசிகர் பதிப்பில், “வையெயிற்றுச் சின்மொழி அரிவை வையைப்” (நன். 431) என்று பிழைப்பட்டுள்ளது. இவ்வாறு தண்டபாணி தேசிகருடைய இரண்டாவது பதிப்பில் (1971) நேர்ந்துள்ள பிழைகளை எல்லாம் சோம. இளவரசு தமது பதிப்பில் அப்படியே அச்சிட்டுவிட்டார். தேசிகரின் முதல் பதிப்போடு (1957) இரண்டாவது பதிப்பை ஒப்புநோக்கியிருந்தால் இப்பிழைகளில் பலவற்றை அவர் தவிர்த்திருக்கலாம். இவற்றைத் தவிர இந்தப் பதிப்பில் இளவரசரால் நேர்ந்த பிழைகளும் அதிகம். பிழை என்றால் வெறும் அச்சுப்பிழை அல்ல. அது தமிழ் நூல்களின் தொழிற்பண்பு என்பதால் அது அல்ல இங்கே குறிக்கப்படுவது. இது வேறு வகை. உரைப் பகுதிகள் இப்பதிப்பில் பல இடங்களில் விடுபட்டுள்ளன. காட்டாக வினைவிகுதிகளைக் கூறும் | |
|
|