பதிப்புரை | தொன்மையான இலக்கண மரபுகளில்1 இரண்டு இந்திய மண்ணுக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஒன்று வடமொழி இலக்கண மரபு; இன்னொன்று தமிழிலக்கண மரபு. தருக்கவியல் முறையில் மொழியை ஆராய்ந்து, விதிகளை வகுத்து வரையறை செய்த இந்திய இலக்கணிகளுள் பாணினியே முதல்வராகக் கருதப்படுகிறார். வடமொழி இலக்கண மரபின் காலப் பழமை, கருத்துச் செறிவு, நெறிமுறை ஒழுங்கு ஆகியவற்றுக்குப்பாணினியே மூலவர்; அவர் இயற்றிய எட்டத்தியாயமே (அஷ்டாத்யாயீ) இலக்கணம்; இலக்கணங்களுக்கு இலக்கணம். வடமொழி வல்லுநர்களின் எண்ணப் போக்கில் வேரூன்றி வளர்ந்த இந்தப் பாணினீயத் தாக்கம் வடமொழி இலக்கண மரபில் ஒரு தேக்கநிலையை உருவாக்கிவிட்டது; நாளடைவில் அந்த நீரோட்டம் நின்றுவிட்டது. தமிழ்மொழியின் இலக்கண மரபு வடமொழி மரபை விடக் காலத்தால் சிறிது பிந்தியதாகக் கருதப்பட்டாலும் கருத்து வளத்தில் பிந்தியது அல்ல. எழுத்து, சொல் என்னும் இரண்டு பகுதிகளோடு அமையாமல் பொருள் என்னும் மூன்றாவது ஒரு பகுதியையும் இலக்கணத்தில் இணைத்து நோக்கிய தமிழ்மரபு மற்ற மரபுகளிலிருந்து மாறுபட்டது; தனித்தன்மை வாய்ந்தது. மொழியியல் அறிஞர்கள் பாணினீயத்தை ஆராய்வதுபோலத் தொல்காப்பியத்தையும் ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்காமல் போகாது. அதோடு இந்த இரு மரபுகளுக்குள் இன்னொரு வேறுபாடும் உண்டு. வடமொழியில் முன்பே கூறியதுபோல இலக்கண மரபு தேங்கி நின்றவிட்டது; தமிழ்மொழியில் அது தொடர்கிறது. இக்கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்த வேண்டும். வடமொழியில் பாணினீயத்துக்குப் பின்னர் உரைகள் தோன்றிப் பெருகின. அதன் விளைவாக அந்த மொழியில் உரைமரபு செழித்து வளர்ந்தது. ஆனால் எட்டத்தியாயத்துக்குப் பின்னர் வடமொழியில் தோன்றிப் பெருகிய இலக்கணங்கள் குறைவு; பாணினிக்குப் பிறகு தோன்றிய நல்ல இலக்கணிகள் குறைவு. அதாவது எட்டத்தியாயத்துக்குப் பின்னர் இலக்கண நூல் இயற்றும் அறிவுரம் எந்த வடமொழிப் புலவருக்கும் உண்டாகவில்லை. அதனால் அவர்கள் உரை, சிற்றுரை, பேருரை, உரை விளக்கம் என்று வகை வகையான உரைகளை எழுதி அமைதி கண்டார்கள். நல்ல காலமாகத் தமிழில் அந்த நிலைமை நேர்ந்துவிடவில்லை. ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்துக்குப் பிறகு நாவலர் போற்றும் நன்னூல் தோன்றியது. தொல்காப்பிய உரைகளுக்குப் பின்னரும் தமிழில் புதிய இலக்கணங்களும் உரைகளும் ________________________ 1மேலை நாட்டு மொழிகளில் இலத்தீனும் கிரேக்கமும் தொன்மையான இலக்கண மரபுகளை உடையன. | |
|
|