பக்கம் எண் : 70
  

பதிப்புரை


நூற்பாவின் பொழிப்புரையில், “பெயரிடத்தும் இவற்றுள் சில விகுதிகளாம்.” (நன்.
140) என்ற பகுதியும் தேன்மொழிக்கு விதி வகுக்கும் நூற்பாவின் பொழிப்புரையில்,
“கெடுதலும் வல்லினம் வரின் இறுதி இயல்பாதலே அன்றி” (நன். 214) என்னும்
உரை வாசகமும் விடுபட்டுள்ளன. வினைப்பகுதிக்குப் புறனடை கூறும் நூற்பாவுக்குச்
சங்கர நமச்சிவாயர் வரைந்த மறுப்பும் விளக்கமும் கொண்ட ஒரு பத்தி (நன். 139)
அடியோடு மறைந்துவிட்டது. அதற்குச் சாமிநாதையர் பதிப்பைப் பார்த்து எழுதிய
அடிக்குறிப்பு மட்டும் தொடர்பற்று நிற்கிறது. இது போன்ற விடுபாடுகளை வேறு
பகுதிகளிலும்103 காணலாம். ஆகவே இதன் முன்னுரையில், “இப்பதிப்பு இதுகாறும்
வெளிவந்துள்ள நன்னூல் விருத்தியுரைப் பதிப்புகளினும் பல துறைகளில் சிறந்து
விளங்குவதாகும்.”
என்று நா. பாலுசாமி கூறியது ஒப்புக்குச் சொன்னது; உண்மை
அல்ல.

     நூலின் தலைப்பைப் பொறுத்த வரையில் பதிப்பாசிரியர் சோம. இளவரசு குருவை
மிஞ்சிய சீடர். முகப்புத் தாளில் உரையாசிரியர் பெயர் எதுவும் இல்லாமல், “நன்னூல்
விருத்தியுரை”
என்று அவர் இப்பதிப்புக்குக் கொடுத்துள்ள தலைப்பு தண்டபாணி
தேசிகர் கொடுத்துள்ளதை விடவும் அரைகுறையானது. விருத்தியுரை என்னும் பெயர்
சங்கர நமச்சிவாயர் உரைக்கும் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம்
புத்துரைக்கும் பொது என்றாலும் வெறுமனே விருத்தியுரை என்றால் முனிவர்
திருத்தங்களைக் கொண்ட புத்தம் புத்துரையாகக் கொள்வது நடைமுறை. எனவே சோம.
இளவரசு தம்முடைய பதிப்புக்குக் கொடுத்துள்ள குறைத் தலைப்பு நல்ல ஆய்வாளரையும்
தடுமாறச் செய்துவிடும்; தவறு செய்ய வைத்துவிடும். இதற்கு ஏற்றதோர் உதாரணத்தை
உரையாசிரியர்கள் என்னும் நூல் வழங்குகிறது.

     சிவஞான முனிவரைப் பற்றி நோக்கு என்னும் தலைப்பில், “சிவஞான முனிவர்
நன்னூலில் சில நூற்பாக்களுக்கு நுண்பொருளும் விளக்கமும் எழுதுகின்றார்.
ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து நோக்கிப் பொருள் கூறுகின்றார்.”
என்று மு.
வை. அரவிந்தன் (1995. பக். 536-537) கருத்துரை வழங்குகிறார். அதற்குச் சான்றாக,
“ஒருவ ரென்பது” (நன். 289) என்ற நூற்பாவின் உரையில் விளக்கப்படும் நயவுரைக்
கூறுகள் ஏழையும் பட்டியலிட்டுக் காட்டியதோடு, “இப்பகுதி சிவஞான முனிவரின்
இலக்கண ஆராய்ச்சியை வெளிப்படுத்துகின்றது.”
என்று அவர் சான்றுரையும்
கூறியுள்ளார். ஆனால் இந்த உரைப் பகுதி சிவஞான முனிவர் எழுதியதே அல்ல;
---------------------------------
    103உரைப் பகுதிகள் விடுபட்டுள்ள பிற இடங்கள்: நூ. 130, 219, 229, 254, 296, 330, 407, 437.