பக்கம் எண் : 71
  

பதிப்புரை
 

பவணந்தி முனிவரின் சொல்லாட்சியை ஆழ்ந்துணர்ந்து சொல்லுக்குச் சொல் நயவுரை
வரைந்தவர் சங்கர நமச்சிவாயர். இவ்வாறு ஒருவர் உரையை மற்றொருவர் உரையாக
மு. வை. அரவிந்தன் பிறழ உணர்ந்ததற்கு அவர் பயன்படுத்திய இந்த விருத்தியுரையின்
பதிப்பியல் குறைபாடு மட்டும் காரணம் அல்ல; இப்பதிப்புக்குச் சோம. இளவரசு
கொடுத்துள்ள குறைத் தலைப்பும் ஒரு காரணம். இத்தகைய குறைபாடுகளில் ஒன்றைக்
கூடத் திருத்தாமல் இதற்கு ஒரு மறுபதிப்பை (1990) வெளியிட்டுள்ள பல்கலைக்கழக
வெளியீட்டுத் துறையைப் பாராட்ட முடியவில்லை.

     நிறை குறைகளை நினைத்துப் பார்க்கும் போது ஒரு பல்கலைக்கழகப் பதிப்பின்
தரம் இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.
இப்பதிப்பைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இந்த எண்ணத்தை என்னுடன்
பகிர்ந்துகொள்வார்கள்.
 

புதிய விருத்தியுரைப் பதிப்பு
 

     இலக்கண மரபு, நூலாசிரியர், நூல், உரைகள், பதிப்புகள் ஆகியவற்றைப் பற்றி
விரிவாகப் பார்த்தோம். இனி இப்பதிப்பைப் பற்றிப் பார்க்கலாம். இந்தப் பதிப்புக்கு
ஆதாரங்கள் இரண்டு. ஒன்று நன்னூல் விருத்தியுரைச் சுவடி; இரண்டு விருத்தியுரைப்
பதிப்புகள். இந்தச் சுவடி ஒரு கடிதப்பிரதி. திருநெல்வேலி அம்பலவாணர்104
பரம்பரையினரின் குடும்பத்திலிருந்து கிடைத்த இந்தச் சுவடியை நண்பர் பா. ரா.
சுப்பிரமணியன் எனக்கு வழங்கினார். அவர் அப்போது ஜெர்மனியில், கொலோன்
பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் பணியாற்றினார். இது நன்னூல் மூலமும் சங்கர
நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவர் திருத்திய புத்துரையும் கொண்டது. இதன்
முகப்பில், “நன்னூல் உரைப்பாடம்” என்ற தலைப்பு மட்டுமே உண்டு; வேறு
தகவல்கள் எதுவும் இல்லை. இரண்டு தொகுதிகளாகக் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள
இந்தச் சுவடியின் முதல் தொகுதியில் 305 பக்கமும் இரண்டாவது தொகுதியில் 538
பக்கமும் உள்ளன. ஒரு பக்கத்தில் 15 முதல் 18 வரிகள் வரை அடித்தல் திருத்தல்கள்
இல்லாமல் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இராமபாணப் பூச்சிகளின்
துளைகளால் இந்தப் பிரதியின் பல பகுதிகளில் எழுத்துகள் உருக்குலைந்துள்ளன.
சிவஞான முனிவர் மாணவர்களில் யாராவது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக்
கையெழுத்துப் பிரதியை உருவாக்கியிருக்கலாம் என்பது என் கணிப்பு. இந்தப் பதிப்புக்கு
இதுவே முதன்மை ஆதாரம்.
------------------------------
     104சாமிநாதையர் (என் சரித்திரம், 1950. பக். 866) இந்தக் குடும்பத்தைப்
பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளார்.