பக்கம் எண் : 75
  

பதிப்புரை


என்றால் உணவுக்கு உப்புபோல உரைக்குச் சுவையூட்டுவது உதாரணம் எனலாம்.
அதனால் இலக்கண உரையாசிரியர்கள் நல்ல இலக்கிய உதாரணங்களைத் தெரிவு செய்து
எடுத்துக்காட்டினார்கள். வெறும் விதிவிளக்கத்துக்காக மட்டுமே இலக்கிய உதாரணங்களை
அவர்கள் எடுத்துக்காட்டவில்லை. அதோடு ஒப்பிலக்கியக் கல்வியும் இலக்கிய
ஆராய்ச்சியும் அவர்களுடைய துணை நோக்கங்களாக இருந்திருக்கலாம். எச்சங்களை
விளக்குவதற்கு மயிலைநாதர் (நன். 359) முப்பது செய்யுள்களை எடுத்துக்காட்டுவதும்
சங்கர நமச்சிவாயர் அப்பகுதியில் ஒரு குறட்பாவுக்கு (நன். 360) விரிவுரை வழங்குவதும்
இக்கருத்துக்குச் சான்று கூறும். இவ்வாறு உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டிய எண்ணற்ற
இலக்கிய மேற்கோள்களுக்கு எல்லாம் இடவிளக்கம் தருவது அரிய பணி; ஆயினும் அது
ஒரு நல்ல பதிப்பாசிரியனின் கடமை.

     இலக்கணப் பதிப்புகளைப் பார்த்த வரையில் தெய்வசிகாமணி முதலியாரும்
சண்முகம் பிள்ளையும் (1889) வெளியிட்ட நன்னூல் விருத்தியுரைப் பதிப்பில்தான்
மேற்கோள் இடவிளக்கக் குறிப்புகள் முதன் முதல் தரப்பட்டுள்ளன. சாமிநாதையரின்
இலக்கணப் பதிப்புகளில் அவை திருத்தமும் தெளிவும் பெற்றன. மேற்கோள்களுக்கு
இடவிளக்கம் கொடுத்ததோடு அமையாமல், விளங்கா மேற்கோள்கள் நாளடைவில்
விளங்கக் கூடும் என்னும் தொலைநோக்கோடு அவற்றுக்கும் அகராதி தொகுத்த
நுண்ணறிவு சாமிநாதையருக்கே உரியது.

     இலக்கண உரைகளில் சிறப்பாக இருவகை மேற்கோள்களைக் காணலாம். உரை
வகுக்கப்படும் மூலநூலின் நூற்பாக்களை அல்லது நூற்பாக்களின் தொடர்களை உரையின்
பிற பகுதிகளில் எடுத்துக்காட்டுவது ஒரு வகை; உரை விளக்கத்துக்காகப் பிற இலக்கிய
இலக்கண மேற்கோள்களை எடுத்துக்காட்டுவது இரண்டாவது வகை. தமிழ் உரைமரபில்
தொடக்கம் முதல் காணப்படும் இந்த இருவகை மேற்கோள்களையும் சங்கர நமச்சிவாயர்
மிகுதியாகக் காட்டியுள்ளார்.

     ஒரு நூற்பாவின் உரையில் அந்நூற்பாவின் சொற்களையும் தொடர்களையும் சங்கர
நமச்சிவாயர் எடுத்துக்காட்டி நயவுரை எழுதுவது முன்பே விளக்கிக் கூறப்பட்டது. இது
போன்ற தொடர்களுக்கு, ‘மெய்திரி பொருண்மே லன்மையும் விளம்புப’ (நூ. 376),
‘உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறு’ (நூ. 377) என்பதுபோல ஒற்றை
மேற்கோள் குறியிடுவது110 சாமிநாதையரின் (1935. பக். 347) பதிப்பு முறை.
--------------------------------
     110இக்குறியீட்டு முறையைப் பிற இலக்கணப் பதிப்பாசிரியர்கள் கடைப்பிடிக்காதது வருந்தத் தக்கது.