பக்கம் எண் : 76
  

பதிப்புரை


ஆனால் சங்கர நமச்சிவாயர் நயவுரை வரைந்த தொடர்கள் எல்லாவற்றுக்கும் அவர்
அவ்வாறு குறியிட்டுக் காட்டவில்லை. உதாரணமாக, “ஒருவ ரென்பது” (நன். 289)
என்னும் நூற்பாவில் இருசொற்களைத் தவிர ஏனையவற்றுக்குச் சங்கர நமச்சிவாயர்
நயவுரை வரைந்துள்ளார். அவற்றில் எதுவும் சாமிநாதையர் பதிப்புகளில் மேற்கோள்
குறியிட்டுக் காட்டப்படவில்லை.

     கருத்து விளக்கம், பொருளியைபு, உதாரணம், முதற்குறிப்பு முதலிய
காரணங்களுக்காகச் சங்கர நமச்சிவாயர் இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் மூலநூலின்
நூற்பாக்களையும் தொடர்களையும் தமது உரையில் பரவலாக எடுத்தாண்டுள்ளார்.
உதாரணமாக, “ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குறித்தே” (நன். 358) என்னும்
நூற்பா அவரால் பலமுறை (நூ. 92, 303, 315, 320, 328, 356, 380)
எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த ஒரு வரிச் சூத்திரம் தண்டபாணி தேசிகர் பதிப்பில் (1957)
நான்கு வகையாக அச்சிடப்பட்டுள்ளது. “பொதுப்பெய ருயர்திணை” (நன். 159)
என்னும் நூற்பாவின் தொடர்கள் இதுபோல் பல இடங்களில் (நூ. 178, 211, 218, 229, 242, 372) அவரது உரையில் எடுத்தாளப்பட்டுள்ளன. சாமிநாதையர் (1935), தண்டபாணி
தேசிகர் (1957) பதிப்புகளில் இவை வெவ்வேறு வகைகளில் அச்சிடப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் மூல நூற்பாவில் உள்ளவாறு ஒரே வகையில் சீர் பிரித்துப்
பதிப்பிப்பதே சிறப்பு. இனி, இரண்டாவது வகை மேந்கோள்களுக்கு இடவிளக்கம்
தருவதைப் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

     சங்கர நமச்சிவாயர் உரையின் இரண்டாவது பதிப்பை வெளியிடும் முன்பு, தமது
அரை நூற்றாண்டு நூற்பதிப்பு நற்பணியில் குறுந்தொகை, தமிழ்நெறி விளக்கம் நீங்கலாக
ஏனைய இலக்கிய இலக்கணங்களை எல்லாம் சாமிநாதையர் வெளியிட்டுவிட்டார்.
அதனால் ஒரு நல்ல பதிப்பை உருவாக்குவதற்கு வேண்டிய பதிப்புக் களமும்
கருவிகளும் அவரிடம் இருந்தன. அவற்றை எல்லாம் சங்கர நமச்சிவாயர் உரையின்
இரண்டாவது பதிப்புக்கு அவர் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஏறக்குறைய
ஐம்பது நூல்களிலிருந்து சங்கர நமச்சிவாயர் எடுத்தாண்டிருந்த மேற்கோள்களுக்குத்
தமது பதிப்பில் சாமிநாதையர் இடவிளக்கக் குறிப்புகளைக் குறித்திருந்தார். பதிப்பாசிரியர்
பலரும் அவற்றை நம்பகமான குறிப்புகளாக ஏற்றுக்கொண்டனர்; தங்கள் பதிப்புகளில்
அப்படியே எடுத்துச் சேர்த்துக்கொண்டனர். சாமிநாதையரிடம் கொண்டிருந்த நம்பிக்கை
காரணமாக அவர்களில் யாரும் அவற்றை மீண்டும் மூலநூல்களோடு ஒப்பிட எண்ணவும்
இல்லை; அப்பணியில் ஈடுபடவும் இல்லை.