| பதிப்புரை | நம்புவது நல்லது; அதை விடவும் நல்லது பரிசோதனை செய்வது என்னும் உயரிய குறிக்கோளுடன் சாமிநாதையரும் தண்டபாணி தேசிகரும் கொடுத்திருந்த மேற்கோள் குறிப்புகள் அனைத்தும் மூலநூல்களோடு மீண்டும் ஒப்பிடப்பட்டுள்ளன; அரிச்சந்திரபுராணம், திருநூற்றந்தாதி போன்று பாடத்திட்டத்தில் இடம் பெறாத நூல்களோடும் ஒப்பிடப்பட்டுள்ளன. அதனால் அவர்களுடைய பதிப்புகளில் நேர்ந்திருந்த ஒருசில விடுபாடுகள் நீக்கப்பட்டுள்ளன; பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. திருக்குறளைத் தவிர ஏனைய இலக்கிய மேற்கோள்களுக்கு எல்லாம் பாடல் எண்களோடு அடி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இடம் விளங்காத மேற்கொள்களுக்கு, அவற்றை எடுத்துக்காட்டிய உரையாசிரியர்களின் காலமுறையைப் பின்பற்றி இடவிளக்கம் குறிக்கப்பட்டுள்ளது; பாடபேதம் நிகழ்ந்துள்ள மேற்கோள்கள் உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பாடபேதங்களைப் பற்றிப் பின்னர் (பக். 81) விரிவாகப் பேசுவதால் மற்றவைகளுக்கு மட்டும் சில உதாரணங்களைக் காட்டலாம். சங்கர நமச்சிவாயர், “இன்னென வரூஉம் வேற்றுமை யுருபு” என்னும் தொல்காப்பியத் தொடரை (புணர். 29) உருபு புணரியலிலும் (நூ. 248, 254), “புலிநின் றிறந்த நீரல் லீரத்து” (நற். 103:4) என்னும் நற்றிணைத் தொடரைப் பெயரியலிலும் (நூ. 267), “யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட்டி ருக்கின் றேன்” (சீவக. 1487:4) என்னும் சிந்தாமணித் தொடரை இடையியலிலும் (நூ. 441), | | | “கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிற்று பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு.” “எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு.” | என்னும் யாப்பருங்கல விருத்தியின் மேற்கோள் பாடல்கள் இரண்டை (யா. வி. 3) எழுத்தியலிலும் (நூ. 92) எடுத்துக்காட்டியுள்ளார். புத்தம் புத்துரையில், “முறைப்பெயர்மருங்கி, னொற்றி நகரமிசை” (தொல். மொழி. 34) என்னும் தொல்காப்பியத் தொடரும் (நூ. 94), “பித்தரிற் பேதையா ரில்” (நாலடி. 52:4), “தேற்றா வொழுக்க மொருவன்க ணுண்டாயின்” (நாலடி. 75:2) என்னும் நாலடியாரின் தொடர்களும் (நூ. 302, 322) எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் பதிப்பாசிரியர்கள் இடவிளக்கம் தராமல் விட்டுவிட்டார்கள். | |
|
|