பக்கம் எண் : 78
  

பதிப்புரை


  ஒருவர் என்னும் படர்க்கைப் பெயர் குறிப்பால் பால் உணர்த்தும் என்று
விளக்கும் பகுதியில் மயிலைநாதர் (நூ. 264) காட்டிய,
 
  “நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே”

என்னும் மேற்கோள் பாடலைச் சங்கர நமச்சிவாயரும் (நூ. 265) எடுத்துக்காட்டுவார்.
சாமிநாதையர் பதிப்புகளில் (1925. பக். 206; 1953. பக். 177) இம்மேற்கோளுக்குப்
பழம்பாடல் என்ற இடவிளக்கமே தரப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநிலையில் குறிப்பதை
விட இறையனார் அகப்பொருள் (நூ. 23) உரை மேற்கோள் என்று இடவிளக்கம் தருவது
பயனுள்ளது. இதுபோலவே வலம் என்னும் இடவேற்றுமை உருபுக்குக்,
 
  “காழ்வரை நில்லாக் களிறன்னான் கைவலத்
தியாழ்வரை நின்றது”

என்று சங்கர நமச்சிவாயர் (நூ. 302) காட்டியுள்ள உதாரணத்துக்குப் பெருங்கதை என்று
நூலின் உட்பிரிவு இல்லாமல் பொதுவாகச்111 சாமிநாதையர் இடவிளக்கம் தந்துள்ளார்.
அவரைப் பின்பற்றிப் பிறரும் இவ்வாறே குறித்துள்ளனர். ஆனால் இப்பகுதி
பெருங்கதையில் காணப்படவில்லை. இந்நூற்பாவின் உரையில் சங்கர நமச்சிவாயர்
காட்டியுள்ள உதாரணங்களில் பெரும்பகுதி மயிலைநாதர் உரையிலிருந்து (நூ. 301)
எடுக்கப்பட்டது. அதனால் நன்னூல் உரையில் மயிலைநாதரால் எடுத்துக்காட்டப்பட்ட
உதாரணம் என்று இதற்கு இடவிளக்கம் கொடுப்பது பொருத்தம்.

     இதுபோலவே பதிகத்தை விளக்கச் சங்கர நமச்சிவாயர் (நூ. 1) காட்டியுள்ள,
 
  “பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே.”

என்னும் நூற்பாவை யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை உரைகளில் உள்ள
மேற்கோளாகத் தண்டபாணி தேசிகர் (1957. பக். 17; 1971. பக். 45) குறித்துள்ளார்.
ஆனால் இம்மேற்கோள் அந்நூல்களில் காணப்படவில்லை. எனவே இதனை இடம்
விளங்கா மேற்கோளாகக் குறிப்பது நல்லது.

     அகநானூறு, கலித்தொகை, புறநானூறு போன்ற நெடும்பாடல்களின் அடிகள்
உதாரணமாக எடுத்துக்காட்டப்படும்போது அவற்றுக்குப் பாடல் எண்களோடு அடி
------------------------------
     111முதல் பதிப்பு (1925) முதல் ஐந்தாம் பதிப்பு (1991) வரை இந்த
மேற்கோள் குறிப்பு எந்த மாற்றமும் இல்லாமல் நிலைபெற்றுவிட்டது.