பதிப்புரை | தோன்றின; நூல்மரபும் உரைமரபும் தனித்தனியே வளர்ந்து செழித்தன; ஒன்றை ஒன்று ஒதுக்காமல் ஒன்றுக்கு ஒன்று உரமிட்டன. இயற்கை இழைத்த கொடுமை, ஏடுகளைப் போற்றிப் பேணாமை, மூடநம்பிக்கை முதலிய காரணங்களால் மறைந்துபோன தமிழிலக்கண நூல்களை விட்டுவிட்டாலும் தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட2 மரபிலக்கண நூல்கள் தமிழிலக்கண மரபின் உயிரோட்டத்தைப் புலப்படுத்தும். எண்ணிக்கையோடு இலக்கணப் பொருட்பரப்பும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் விரிவடைந்தது. எழுத்து, சொல், பொருள் எனத் தொல்காப்பியர் காலத்தில் மூன்றாக அமைந்திருந்த தமிழ் இலக்கணம் காலப்போக்கில் கிளைத்து வளர்ந்தது; இறையனார் களவியலுரை காலத்தில்3 எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்காகவும் வீரசோழியத்தின் காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாகவும் விரிவு பெற்றது. இவற்றோடு பாட்டியல் என்ற பகுதியும் கூடித் தமிழ் இலக்கணம் மேலும் வளர்ந்தது. இலக்கணக் கோட்பாடுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தனித்தனி இலக்கண நூல்கள் தோன்ற வழிவகுத்தது. இலக்கண மரபு இவ்வாறு நூற்றாண்டுதோறும் வளர்ந்த காரணத்தால் இலக்கணத்தை நூற்பாக்களாக எழுதி, மனனப்படுத்தும் வழக்கம் தமிழ்மொழியில் இன்றளவும் தொடர்கிறது. உரைநடையின் பயிற்சியும் வளர்ச்சியும் மிகுந்துவிட்ட இந்த நூற்றாண்டிலும் வினைத்திரிபு விளக்கம், தமிழ் நூல், இக்காலத் தமிழியல் போன்ற மரபுமுறை இலக்கணங்கள்4 தோன்றுகின்றன. தொன்னெறி மரபின் தொடர்ச்சிக்கு இவையே தக்க சான்றுகள். வாழும் மொழியில் மரபுகள் வளரும்; வாழும். தமிழிலக்கண வரலாறு உணர்த்தும் உண்மை இதுவே. | புத்திலக்கணத் தோற்றம் | ஆற்றொழுக்குபோலத் தொடரும் தமிழிலக்கண வரலாற்றில் நன்னூல் தோன்றிய காலமும் சூழலும் குறிப்பிடத் தக்கன. தொல்காப்பியம் தோன்றிப் பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நன்னூல் எழுந்தது. இந்த நெடிய காலப்பரப்பில் தமிழக அரசியல், சமயம், மொழி முதலியவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள் சொல்லி முடியா. பாண்டியர், களப்பிரர், பல்லவர், சோழர் என்று வெவ்வேறு அரச பரம்பரை மாறி ____________________________ 2பொன். கோதண்டராமன், இலக்கண அகரவரிசை (தமிழாய்வு தொகுதி 5), சென்னை, 1977. 3களவியல் என்ற இறையனார் அகப்பொருள், கழகம், சென்னை, 1969. பக். 7, 14. 4மு. இராகவையங்கார், வினைத்திரிபு விளக்கம், மானாமதுரை, 1958; த. சரவணத்தமிழன், தமிழ்நூல் (தமிணூல்), திருவாரூர், 1972; சொ. சிங்காரவேலன், இக்காலத்தமிழியல், மயிலாடுதுறை, 1987. | |
|
|