| பதிப்புரை | முனிவரின் வைப்புமுறையையே மயிலைநாதரும் சங்கர நமச்சிவாயரும் நிறுத்த முறை என்று குறிப்பிடுவார்கள். நூல் நுதலும் பொருள்களையும் அவற்றின் வைப்புமுறையையும் பவணந்தி முனிவர் நான்கு நூற்பாக்களால் (நன். 3, 57, 259, 270) தொகுத்துக் கூறுவது முன்பே (பக். 18) விளக்கப்பட்டது. அவை தவிரத் தொகைமொழிகளின் வகை (நன். 362), பொருள்கோள்களின் தொகை (நன். 411) ஆகியவற்றைக் கூறும் நூற்பாக்களிலும் அவர் இவ்வாறு தொகுத்துச் சுட்டுவதுண்டு. ஆசிரியரின் இந்த வைப்புமுறையைச் சுட்டிக்காட்டி விளக்குதற்கு நூற்பா நுதலும் பொருளைக் கூறும் பகுதிகளில் சங்கர நமச்சிவாயர்116 இத்தொடரைப் பயன்படுத்துவார். எந்த நூற்பாவில் நிறுத்திய முறை என்பதைச் சில இடங்களில் (நன். 47, 260, 271, 320, 420) அவரே, “பெயர்வினை, எனவிரண் டாகும் என நிறுத்த முறையானே” (நன். 320) என்பதுபோலத் தெளிவாகச் சுட்டுவதுண்டு; பல இடங்களில் அவ்வாறு சுட்டுவதில்லை. சங்கர நமச்சிவாயர் சுட்டாத இடங்களில் அவர் கருதிய நூற்பா எது என்று சாமிநாதையரும் தண்டபாணி தேசிகரும் குறிப்பிட117 முயன்றுள்ளனர்; ஆனால் ஒருவரும் முற்ற முடியக் குறிப்பிடவில்லை. அந்நூற்பாக்கள் அனைத்தும் இப்பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. | | பாடபேதங்கள | கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏடுகளைப் பார்த்து நூல் பதிப்பிக்கும் வழக்கம குறைந்துவிட்டது. அதனால் பதிப்புக் கலையும் பாடபேத ஆராய்ச்சியும் தமிழியலில் நன்றாக வளரவில்லை. புறநானூறு, திருக்குறள் போன்ற சில இலக்கியங்களுக்கு மூலபாடத் திறனாய்வு நூல்கள் வெளிவந்திருந்தாலும் ஒரு இலக்கணத்தின் பாடபேதங்களுக்கு ஆய்வுநூல் வந்துள்ளதாகத் தெரியவில்லை. அண்மையில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்பின்118 முன்னுரையில், “கிடைத்துள்ள பாட வேறுபாடுகள் அனைத்தையும் இந்நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளோம். மூலபாடத்தை இப்பதிப்பில் நிறுவ முயலவில்லை. அதனை வருங்காலத்தில்தான் செய்து முடிக்க வேண்டும்.” என்று பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் கூறுவது இக்கருத்தை உறுதிப்படுத்தும். நீண்ட பதிப்பு வரலாற்றை நன்னூல் பெற்றிருந்தாலும் தொல்காப்பியத்துக்கு இருப்பதைப் போலத் தரமான மூலபாடப் பதிப்புகள் அதற்கு இதுவரையில் வெளிவரவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ----------------------------- 116அவர் இத்தொடரைப் பயன்படுத்திய இடங்கள் நன். 26, 36, 37, 40, 47, 58, 62, 73, 74, 98, 99, 102, 107, 110, 122, 128, 151, 260, 261, 262, 265, 266, 267, 268, 269, 271, 272, 273, 295, 320, 331, 363, 412, 420, 442. 117சாமிநாதையர் ஐந்து இடங்களிலும் தண்டபாணி தேசிகர் இருபத்தைந்து இடங்களிலும் குறித்துள்ளனர். 118தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே. எம். வேங்கடராமையாவும் பிறரும், திருவனந்தபுரம், 1996. பக். ii. | |
|
|