பக்கம் எண் : 82
  

பதிப்புரை
 

     நன்னூல் மூலம், உரை, உதாரணம் என்னும் மூன்று பகுதிகளிலும் நேர்ந்துள்ள
நூற்றுக் கணக்கான பாடபேதங்களைக் குறித்த பெருமை சாமிநாதையரையே சேரும்.
அவரும் கூட மயிலைநாதர் பதிப்பில் குறித்த அளவு119 சங்கர நமச்சிவாயர் பதிப்பில்
பாடபேதங்களைக் குறிக்கவில்லை. நன்னூல் விருத்தியுரைப் பதிப்பாசிரியர்களுள
தண்டபாணி தேசிகரே (1971. முன்னுரை) பாடபேதங்களைக் குறிப்பதில் சிறிது கவனம்
செலுத்தியுள்ளார். அவரும் நன்னூல் மூலபாடத்தில் சங்கர நமச்சிவாயரும் சிவஞான
முனிவரும் மாறுபடும் இடங்களை முழுமையாகக் காட்டவில்லை.

     நன்னூல் பதிப்புகளைப் பார்த்த வரையில் மூலபாடத்துக்கு மட்டும் முந்நூறு
பாடபேதங்கள் காணப்படுகின்றன; ஏடுகளையும் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை
இரட்டிக்கும் என்பது மிகை ஆகாது. உரைப்பாடங்களிலும் உதாரணப் பாடல்களிலும்
நிகழ்ந்துள்ள பாடபேதங்கள் கணக்கில் அடங்கா. இவற்றை எல்லாம் முறையாகத
தொகுப்பது பெரும் பணி; குழுப்பணி. எனவே மூலபாடத்திலும் உரைப்பாடத்திலும
நேர்ந்துள்ள முக்கியமான சில பாடபேதங்களே இப்பதிப்பில் காட்டப்பட்டுள்ளன.
மேற்கோள்களில் நிகழ்ந்துள்ள பாடபேதங்கள் குறிப்பளவில் உடுக்குறியிட்டுக்
காட்டப்பட்டுள்ளன. வகைக்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

     “தொல்லை வடிவின” (நன். 98) என்னும் நூற்பாவின் இரண்டாவது அடியில்
சங்கர நமச்சிவாயர் கொண்ட பாடம், “மெகர மொகரமெய்” என்பது; புத்துரையில் உள்ள பாடம், “மெகர வொகரமெய்” என்பது. இப்பாடபேதம் எங்கும்
குறிக்கப்படவில்லை. குற்றியலுகரம் பற்றிய நூற்பாவின் உரைக்குச் சிவஞான முனிவர் திருத்தி எழுதிய விளக்கத்தில், “அங்ஙனம் பாகுபடுத்துக் கருவி செய்ததனால் போந்த பயன் இன்று என்பதாம்.” (நன். 94) என்று ஒரு தொடர் உள்ளது. இதுவரை வெளிவந்துள்ள பதிப்புகளில் இத்தொடர், “போதப் பயன் இன்று என்பதாம்.” என்று பிழையாகக் காணப்படுகிறது. இப்பகுதி தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலிருந்து
(பக். 54) எடுத்து எழுதப்பட்டது. அந்நூலில், “போந்த பயன் இன்று” என்பதே
பாடம் இந்த உண்மை மற்ற பதிப்பாசிரியர்களுக்குத் தெரிந்து, அதோடு இப்பகுதியை அவர்கள் ஒப்பிட்டிருந்தால் இந்தப் பிழைப் பாடம் நூற்றாண்டு விழாக் கண்டிருக்காது என்று உறுதியாகக் கூறலாம்.
-------------------------------
     119கி. நாச்சிமுத்து (1986. பக். 61, 79) இக்கருத்தை ஆராய்ந்துள்ளார்.