| பதிப்புரை | இனி, “இடைத்தொட ராய்தத் தொடர்” (நன். 182) என்னும் நூற்பாவின புத்துரைப் பகுதியில் சிவஞான முனிவர் தொல்காப்பிய நூற்பாக்கள் மூன்றை (தொல். குற்றிய. 6, 7, 8) மேற்கோள் காட்டியுள்ளார். அவற்றுள் இரண்டு நூற்பாக்களில்பாடபேதங்கள் நேர்ந்துள்ளன. தொல்காப்பியப் பதிப்புகளில் இல்லாத இப்பாடபேதங்கள் வலிந்து கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும். தொல்காப்பிய உரைகளோடு ஒப்பிட்டால் இது விளங்கும். மேற்கோள் என்றாலும் அவற்றின் சிறப்பு நோக்கி இப்பாடபேதங்கள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவு செய்த பாடபேதங்கள் மட்டுமே இந்தப் பதிப்பில் குறிக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுதல் நல்லது. இன்னொரு கருத்தையும் இத்தலைப்பில் குறிப்பிட வேண்டும். செவ்வெண்ணில் வரும் எச்சவும்மையை விளக்கும் (நன். 427) பகுதியில், | | “செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொரு ளுந்தருந் திறத்தது வினையே.” | என்று சங்கர நமச்சிவாயர் ஒரு உதாரணத்தைக் காட்டுவார். இந்த உதாரணம், “செய்பவன் கருவி” (நன். 320) என்னும் நூற்பாவோடு பெரிதும் ஒத்திருப்பதால் இது அந்நூற்பாவின் பாடபேதமாகத் தோன்றுகிறது என்று சாமிநாதையர் (1935. பக். 411) ஒரு அடிக்குறிப்பு120 எழுதியுள்ளார். இக்கருதுகோளைப் பலர்121 மறைமொழியாக} ஏற்றுக்கொள்வார்கள். சாமிநாதையர் கருதுவதுபோல் இந்த உதாரணம் வினையியல் நூற்பாவின் பாடபேதமா என்பது நுனித்து நோக்கத் தக்கது. சங்கர நமச்சிவாயர் தம்முடைய உரையில் நன்னூல் சூத்திரங்களைத் தாராளமாக எடுத்தாளுவது மேலே (பக். 76) சுட்டப்பட்டது. அவற்றுள் முழு நூற்பாக்கள் உண்டு என்றாலும் சூத்திரத் தொடர்களும் சொற்களுமே மிகுதி. ஒரு நூற்பாவைப் பல நூற்பாக்களின் உரைகளிலும் பல நூற்பாக்களை ஒரு நூற்பாவின் உரையிலும் அவர் எடுத்தாளுவார். காட்டாக, “ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” (நன். 358) என்னும் நூற்பாவை அவர் பல இடங்களில் எடுத்தாளுவதைக் கண்டோம். அதுபோலவே, “சொற்றொறு மிற்றிதன் பெற்றி” (நன். 461) என்னும் தொடரை அவர் எட்டு இடங்களில் (நன். 341, 354, 377, 378, 379, 390, 394, 414) எடுத்தாளுவதும் காலம் காட்டும் ஈறுகளைக் கூறும் நூற்பாவின் (நன். 145) உரையில் பன்னிரண்டு ---------------------------- 120முதல் பதிப்பில் (1925) இக்குறிப்பு இல்லை. 121தண்டபாணி தேசிகர், 1957. பக். 462; 1971. பக். 614; க. ப. அறவாணன், 1977. பக். 151. | |
|
|