| பதிப்புரை | பின் படுசொல் வரும் என்பதற்கு, “இனைத்தென அறிந்த பொருட்கு உம்மை படும், இன்னென் உருபிற்கு இன்னென் சாரியை இன்மை படும்” என்ற உதாரணங்களைச் சாமிநாத தேசிகர் (இல. கொ. 78 உரை) எடுத்துக்காட்டுவார். இவை இரண்டும் தொல்காப்பிய நூற்பாக்களை (கிளவி. 33; புணர். 29) மாற்றி அமைத்துக்கொண்ட உதாரணங்கள்125 என்று சொல்வது எளிது. சங்கர நமச்சிவாயர் இந்த உரைமரபை உணர்ந்தவர். அதோடு அவர் சாமிநாததேசிகரின் மாணவர். இவற்றை எல்லாம் கூர்ந்து நோக்கினால் எச்சவும்மை பற்றிய நூற்பாவின் உரையில் சங்கர நமச்சிவாயர் எடுத்துக்காட்டியுள்ள, “செய்பவன் கருவி” என்ற உதாரணம் வினையியல் நூற்பாவின் (நன். 320) பாடபேதம் அல்ல; உதாரணத்துக்காக அந்நூற்பாவிலிருந்து சங்கர நமச்சிவாயர் மாற்றி அமைத்துக்கொண்ட உரை வாசகம் என்பது தானே விளங்கும். எனவே அந்த உதாரணத்தைச் “செய்பவன் கருவி” (நன். 320) என்னும் நூற்பாவின் பாடபேதமாகக் கருதுவதை விட அதன் உரை வாசகமாகக் கொள்வதே மூலபாட ஆராய்ச்சிக்குப் பொருந்தக் கூடிய முடிபு. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் என்று எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்த அனுபவ முதிர்ச்சியால் சங்கர நமச்சிவாயர் காட்டிய உதாரணப் பாடல்களில் காணப்படும் பாடபேதங்களைச் சாமிநாதையர் ஆங்காங்கே குறித்துள்ளார். மூலம், உரை, உதாரணம் என்ற வேறுபாடு நோக்காமல் இவ்வாறு உதாரணச் செய்யுள்களின் பாடபேதங்களையும் குறிக்கத் தொடங்கிய பதிப்பாசிரியர் சாமிநாதையராகத்தான் இருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு குறித்த இடங்கள் குறைவு என்பது பலருக்குத் தெரியாது. காட்டாகச் சீவக சிந்தாமணியைப் பார்க்கலாம். சங்கர நமச்சிவாயர் இந்தக் காப்பியத்திலிருந்து நாற்பது பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவற்றுள் பதினேழு பாடல்களில் (நன். 297, 302, 341, 351(2), 372, 392, 396, 409, 410, 421(2), 422, 433, 441, 459(2) பாடபேதங்கள் காணப்படுகின்றன. முதல் பதிப்பில் ஒன்றே ஒன்று (நன். 392); இரண்டாவது பதிப்பில் புதிதாக மூன்று ------------------------------- 125நூற்பாவின் பொருளமைதியை எதிர்மறை முகத்தால் விளக்குதற்குத், “தனிநிலை யொற்றிவை” (யா. 3) என்னும் நூற்பாவை யாப்பருங்கல விருத்தி ஆசிரியரும் நூற்பாவின் சொல்லமைதிச் சிறப்பை விளக்குதற்குப், “பல்லோர் படர்க்கை” (நன். 348) என்னும் நூற்பாவைச் சங்கர நமச்சிவாயரும் மறுப்புரைச் சான்றுக்காகச், “செய்யா யென்னும்” (தொல். எச்ச. 54) என்னும் நூற்பாவைச் சிவஞான முனிவரும் மாற்றிக் காட்டுவது (தொல். விரு. பக். 59-60) வேறு வகை. | |
|
|