| பதிப்புரை | (உரையாசிரியர்களும் அடியார்க்குநல்லாரும் இம்முறைக்குச் சிறப்பிடம் தருவார்கள். அவர்களுடைய உரைகளில் பயின்று காணப்படும் எண்ணற்ற இலக்கிய இலக்கண மேற்கோள்களே இதற்குச் சான்று கூறும்.. தொல்காப்பியருக்கும் பவணந்தி முனிவருக்கும் இடைப்பட்ட கால இடைவெளி பெரிது. அதோடு வடமொழி மரபைத் தழுவிப் பவணந்தி முனிவர் தமது நூலில் பகுபத உறுப்பிலக்கண விளக்கத்துக்குப் பதவியலை அமைத்திருந்தார். இவற்றால் இவ்விரு இலக்கணிகளின் கோட்பாடுகள் வேறு வேறு என்றும் நன்னூல் தொல்காப்பியத்துக்கு வழிநூல் அல்ல; எதிர்நூல் என்றும் இலக்கண உலகில் ஒரு கருத்து நிலவியிருக்கக்கூடும். இக்கருத்தை மறுக்கவும் மாற்றவும், “இஃது எதிர்நூல் அல்ல.” (நன். 62) என்று மயிலைநாதரும் தொல்காப்பியத்தோடு, “இந்நூல் மறுதலைப்பட்டது என்று கோடற்க.” (நன். 164) என்று சங்கர நமச்சிவாயரும் எழுதினர். அதோடு அமையாமல் இயலும் இடம் எல்லாம் தொல்காப்பிய நன்னூல் ஒப்பியல் முறையையும் அவர்கள் கடைப்பிடித்தனர். தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் இடையே ஊடுருவி நிற்கும் உறவு அடிவேருக்கும் கிளைவிழுதுக்கும் உள்ளது போன்றது. ஒப்பீட்டுக் கண்ணோட்டத்தில் இந்த உறவை ஆராய வித்திட்டவர் மயிலைநாதர். சார்பெழுத்தின் தொகையைக் கூறும் நூற்பாவின் உரையில், | | | “எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.” | என (தொல். நூன். 1) ஆசிரியர் தொல்காப்பியனாரும் இவ்வாறு முதல், சார்பு என வகுத்துக்கொண்டார் என்க. அஃதே, அவர் சார்பெழுத்து என மூன்றே கொண்டாராலோ எனின் அஃதே, நன்று சொன்னாய்! ஒழிந்தவை எப்பாற் படும் என்றார்க்கு மூன்றாவதோர் பகுதி சொல்லலாவது இன்மையானும் முதலெழுத்து ஆம் தன்மை அவற்றிற்கு இன்மையானும் சார்பின் தோன்றுதலானும் இப்பத்தும் சார்பாகவே கொள்ள வேண்டும் என்பது. அஃதே அமைக.” என்று மயிலைநாதர் (நன். 59) நன்னூலைத் தொல்காப்பியத்தோடு ஒப்பிட்டு126 ஆராய்வார். ------------------------------- 126சார்பெழுத்துக் கோட்பாட்டில் தொல்காப்பியருக்கும் பவணந்தி முனிவருக்கும் உள்ள வேறுபாட்டைச் சிவஞான முனிவரும் (தொல். விரு. பக். 54-57) விரிவாக ஆராய்ந்துள்ளார். | |
|
|