| பதிப்புரை | இவ்விரு நூல்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வேறு சில இடங்களிலும் (நன். 105, 130, 319, 357, 364, 371, 377, 388, 448) அவர் விளக்குவார். இந்த முறையைப் பின்பற்றி அவருக்குப் பின் வந்த சுப்பிரமணிய தீக்கிதர் (பி. வி. 2, 5, 8, 21, 49 உரை), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 5, 6, 142, 154, 175, 200, 204, 250, 313, 334, 336, 338 உரை), சாமிநாத தேசிகர் (இல. கொ. 6, 7, 8, 43, 117, 129 உரை), சங்கர நமச்சிவாயர் (நன். 94, 124, 128, 158, 233, 265, 270, 274, 295, 300, 316, 320, 360, 401), சிவஞான முனிவர் (தொல். விரு. பக். 12-14, 54-57; இல. சூறா. பக். 96, 99, 103, 108; நன். 3, 50, 60, 73, 91, 106, 137, 182, 261, 285, 449) முதலியோரும் இவ்விரு நூல்களையும் ஒப்பிடுவார்கள். இந்த ஒப்பியல் உரைமரபை நன்றாகக் கற்றுத் தெளிந்த சாமுவேல் பிள்ளை வால்ற்றர் ஜாயீஸ் என்பவரோடு இணைந்து தொல்காப்பிய நன்னூல் என்னும் ஒப்பியல் நூல் ஒன்றை 1858-இல் பதிப்பித்தார். தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் இலக்கணக் கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து முதன் முதல் வெளிவந்த மூலபாட ஒப்பியல் பதிப்பு இதுவே. இப்பதிப்பைத் தழுவி,127 நன்னூல் நூற்பாக்களோடு ஒத்த தொல்காப்பிய நூற்பாக்களின் எண்களைப் பவானந்தம் பிள்ளை தம்முடைய பதிப்பில், நன்னூல் சூத்திர அகராதி என்னும் பகுதியில் (1922. பக். 288-298) அமைத்தார். இவ்விரு நூல்களுக்குப் பிறகு ஒப்பியல் நோக்கில் வெளிவந்த நூல்கள் எல்லாம்128 அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டன. என்றாலும் அப்பதிப்புகளைப் பற்றி இந்நூல்களின் ஆசிரியர்கள் யாரும் மறந்தும் ஒரு வார்த்தை எழுதவில்லை. தடயங்களை மறைப்பது சட்டவியலில் குற்றம்; தண்டனைக்கு உரியது. ஆனால் தமிழியலில் அதுவே பாராட்டுக்குரிய தகுதியாகத் தோன்றுகிறது. இப்பதிப்பில் உள்ள ஒப்பியல் தொகுப்புக்கு இந்த நூல்கள் எல்லாம் உதவின; பவானந்தம் பிள்ளை வகுத்துக் காட்டிய முறையே இங்கும் தழுவப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நூல்களில் நேர்ந்துள்ள விடுபாடுகள், குறைபாடுகள் முதலியவை தொல்காப்பிய நன்னூல் உரைகளோடு மீண்டும் ஒப்புநோக்கப்பட்டு, இயன்ற வரை நீக்கப்பட்டுள்ளன. இலக்கண ஒப்பியல் பரந்துபட்ட ஒரு துறை. எனவே இப்பகுதி இன்னும் செப்பமுற வாய்ப்பு உண்டு. ------------------------------- 127பவானந்தம் பிள்ளை, நன்னூல், சென்னை, 1922. பக். xxiii. 128க. வெள்ளைவாரணர், தொல்காப்பியம்-நன்னூல், 1962; 1971; ச. வே. சுப்பிரமணியன், இலக்கணத் தொகை எழுத்து, சென்னை, 1967; இலக்கணத் தொகை சொல், நாகர்கோவில், 1971; ரா. சீனிவாசன், தொல்காப்பிய நன்னூல், சென்னை, 1972; க. ப. அறவாணன், தொல்காப்பிய ஒப்பியல், சென்னை. 1974. | |
|
|