பக்கம் எண் : 89
  

பதிப்புரை
 

கலைச்சொற்கள
 

     இலக்கணப் பதிப்புகளில் அரும்பத அகராதி என்னும் பயனுள்ள பகுதியைச்
சேர்த்தவர் சாமிநாதையர்.சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி வெளிவந்த பின்னர்
அப்பகுதியின் பயன் குறைந்துவிட்டது. எனவே இப்பதிப்பில் அரும்பத அகராதி இடம்
பெறவில்லை. அதற்குப் பதிலாக இலக்கணக் கலைச்சொற்கள் என்னும் பகுதி
சேர்க்கப்பட்டுள்ளது. நன்னூல் மூலபாடத்தில் வரும் இலக்கணக் கலைச்சொற்கள்
அப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் அமைப்பும் முறையும் அங்கு விரிவாக
விளக்கப்பட்டுள்ளன.

     பல பல்கலைக்கழகங்களில் இலக்கண நூல்களுக்குத் தரமான சொல்லடைவுகள்
நீண்ட காலமாகவே இருந்துவருகின்றன. ஆய்வேடுகளின் இணைப்புகளாக நன்னூல்,
தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களுக்கு இருக்கும் சொல்லடைவுகள்129
அவற்றுள் குறிப்பிடத் தக்கன. சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்,
கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களுக்குச் சொல்லடைவுகள் அச்சிடப்பட்டிருந்தாலும்
இலக்கணங்களுக்கு ஏனோ இதுவரையில் சொல்லடைவுகள் வெளியிடப்படவில்லை.
அண்மைக் காலத்தில் அறிமுகமான மொழியியலுக்குக் கூட நான்கைந்து கலைச்சொல்
அகராதிகள் இருக்கின்றன. ஆனால் மரபிலக்கணக் கலைச்சொற்களுக்கு விரிவான
அகராதி130 வெளிவராமல் இருப்பது தமிழியலுக்கு ஒரு குறை. கலைச்சொல் அகராதி
போன்ற நோக்குநூல் இலக்கணத் துறையின் ஆய்வு வளர்ச்சிக்கு மிகவும்
இன்றியமையாதது. அந்த எண்ணத்தை வலியுறுத்துவதே இக்கலைச்சொல் பட்டியலின்131
நோக்கம்.
 

சந்திக் குறியீடுகள்
 

     இன்னொரு வகையிலும் பழைய பதிப்புகளிலிருந்து இப்பதிப்பு வேறுபட்டது. இங்கு
நான் குறிப்பிடுவது இப்பதிப்பில் பின்பற்றப்பட்டுள்ள சந்திக் குறியீடுகள் பற்றியது.
விளக்கிச் சொன்னால் சொல்லியல், தொடரியல், பொருளியைபு, மரபு
-----------------------------
     129க. ப. அருணாசலம், எம். லிட். ஆய்வேடு, 1973; க. பாலசுப்பிரமணியன், பிஹெச். டி. ஆய்வேடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர், 1981.
     130நான் குறிப்பிடுவது இலக்கணக் கலைக் களஞ்சியத்தை விட (பொன்.
கோதண்டராமன், சென்னை, 1985.) விரிவான அகராதி.
     131ஜீ. யூ. போப்பின் இலக்கண அகராதியும் (பவணந்தி முனி செய்த
நன்னூல் மூலமும் பொழிப்புரையும், 1857. பக். 137-184) வே. சீதாலட்சுமியின்
கலைச்சொல விளக்கப் பட்டியும் (நன்னூலாரின் இலக்கணக் கலைச்சொல்லாட்சி,
சென்னை, 1993. பக். 124-210) வேறு வகையில் அமைந்துள்ளன.